தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் ஜூன் 23ம் தேதியன்று எம்.ஜி.ஆர்-ஜானகி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. விஷால் தலைமையில் பாண்டவர் அணியும், பாக்கியராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியும் களத்தில் இறங்கின.
ஆனால், அடுத்தடுத்து நடந்த பல்வேறு நிகழ்வுகளால் தேர்தல் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது. கடைசியாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, ஜூன் 22ம் தேதி மாலையில்தான் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவுப்படி இன்று (23ம் தேதி) மயிலாப்பூர் புனித எப்பாஸ் பள்ளியில் தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
இந்த தேர்தலில் வாக்களித்த பின்பு நடிகர், நடிகைகள் அளித்த பேட்டி வருமாறு:
பாண்டவர் அணியின் சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நாசர் கூறுகையில், ‘‘தேர்தல் முறையாக சட்டப்படிதான் நடக்கிறது. ரஜினிக்கு தாமதமாக தபால் வாக்குச்சீட்டு சென்றதற்கு வருத்தப்படுகிறேன்.
காலதாமதத்திற்கான காரணங்கள் தெரிவிக்கப்பட்டு விட்டன’’ என்றார்.
பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் விஷால் கூறுகையில், ‘‘நடிகர் சங்கக் கட்டடத்தை கட்டி முடிக்க வேண்டும். அதற்காகத்தான் இவ்வளவு போராட்டம். தேர்தல் நிச்சயமாக நியாயமாக நடைபெறும். இந்த இடம் ஏற்கனவே தேர்தல் நடந்த இடம்தான். அதனால், சங்க உறுப்பினர்களுக்கு தெரிந்த இடம்தான்’’ என்றார்.
குஷ்பு கூறுகையில், ‘‘இந்த தேர்தல் நடைபெறுமா என்பதே சில நாட்களாக கேள்விக்குறியாக இருந்தது. ஆனாலும், பல பிரச்னைகளை தாண்டி இந்த தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 80 சதவீத வாக்குகள் பதிவாக வாய்ப்பு உள்ளது’’ என்றார்.
நடிகை பூர்ணிமா பாக்யராஜ் கூறுகையில், ‘‘நான் சங்கரதாஸ் அணியின் சார்பில் போட்டியிடுகிறேன். கண்டிப்பாக நல்லது நடக்க வேண்டும். அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார்.
நடிகை ரோகிணி கூறுகையில், ‘‘நடிகர் சங்கத்திற்கான தேர்தல் பல தடைகளை கடந்து நடைபெறுகிறது. இந்த தேர்தல் நடைபெறுவதற்கு உதவிய நீதித்துறைக்கும், காவல் துறைக்கும் நன்றி’’ என்று தெரிவித்துள்ளார்.
நடிகை காயத்ரி ரகுராம் கூறுகையில், ‘‘உறுப்பினர்கள் அனைவரும் வந்து வாக்களிக்க வேண்டும். சுவாமி சங்கரதாஸ் அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது’’ என்று கேட்டுக் கொண்டார்.
நடிகை கோவை சரளா, ‘‘ரஜினி சாருக்கு தபால் ஓட்டு தாமதமானதற்கு நாங்கள் காரணமில்லை. நிச்சயமாக பாண்டவர் அணி தான் வெற்றி பெறும்’’ என்று தெரிவித்தார்.
நடிகர் சின்னிஜெயந்த் கூறுகையில், ‘‘ஒரே நாளில் தேர்தல் ஏற்பாடுகளை சிறப்பாக செய்துள்ளனர். தேர்தல் அதிகாரி மற்றும் காவல்துறைக்கு நன்றி. இது சினிமா குடும்பத்திற்குள் நடைபெறும் ஊடல். தேர்தலுக்கு பின் அனைவரும் இணைந்து செயல்படுவோம்’’ என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நாசர் தலைமையில் பாண்டவர் அணியினர், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்தித்து பேசினர். தாங்கள் ஆளும்கட்சிக்கு எதிரானவர்கள் அல்ல என்பதை தெரிவித்து, தேர்தல் சுமுகமாக நடைபெற அரசு உதவ வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.