உலகக் கோப்பை கிரிக்கெட் கடைசி வரை தில் காட்டிய ஆப்கன்... இந்தியா த்ரில் வெற்றி

CWC, Indias thrilling win against Afghanistan in Southampton match

by Nagaraj, Jun 23, 2019, 10:18 AM IST

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா, கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. கடைசி ஓவர் வரை வெற்றிக்கு போராடிய ஆப்கன் அணி, இந்திய வீரர் முகமது சமி கடைசி ஓவரில் தொடர்ச்சியாக 3 பந்தில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை புரிய ஒரு வழியாக 11 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று இந்திய ரசிகர்களை நிம்மதி அடையச் செய்தது.

 

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா- ஆப்கானிஸ்தான் இடையேயான போட்டி சவுத்தாம்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்தத் தொடரில் தான் ஆடிய 5 போட்டிகளிலுமே மோசமான தோல்வியைத் தழுவிய ஆப்கனை, இந்திய வீரர்கள் அடித்து நொறுக்கி அபாரமாக ரன் குவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடந்ததோ எதிர்மாறாக அமைந்து விட்டது. துவக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் ஆப்கன் வீரர்களின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தட்டுத்தடுமாறினர்.


இந்தத் தொடரில் 2 சதமடித்து சாதித்திருந்த ரோகித் சர்மா 10 பந்துகளை சந்தித்து ஒரே ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்து கேப்டன் கோஹ்லி, ராகுலுடன் சேர்ந்து ஓரளவுக்கு அதிரடி காட்ட, 53 பந்துகளை சந்தித்து 30 ரன்கள் சேர்த்திருந்த ராகுல் அவுட்டானார். அடுத்து வந்த தமிழக வீரர் விஜய் சங்கரும் ரன் எடுக்க சிரமப்பட்டு 41 பந்துகளில் 29 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.


தொடர்ந்து வந்த அனுபவ தோனியும் ரன் எடுக்க முடியாமல் தடவிக் கொண்டே இருக்க மறுமுனையில் 67 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேப்டன் கோஹ்லியும் அவுட்டானார்.

பந்து வீச்சிலும், பீல்டிங்கிலும் ஆப்கன் வீரர்கள் அபார திறமையை வெளிப்படுத்தியதால் கடைசி வரை இந்திய வீரர்கள் ரன்களை குவிக்க முடியவில்லை. இதனால் 50 ஓவர் முடிவில் இந்தியா 8 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 2010 உலகக் கோப்பை முதல் இந்தியா முதலில் ஆடிய போட்டிகளில் எடுத்த மிகக் குறைவான ரன் இது தான் என்ற மோசமான சாதனையை படைத்தது.


இதனால் 225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் ஆடியது. பந்து வீச்சிலும், பீல்டிங்கிலும் இந்தியாவுக்கு தண்ணி காட்டியது போல் பேட்டிங்கிலும் ஆப்கன் வீரர்கள் இந்தியாவுக்கு போக்குக் காட்டி அதிர்ச்சி கொடுத்தனர்.ஆப்கன் வீரர்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த, இந்திய பந்து வீச்சாளர்களும் நம்பிக்கையுடன் துல்லிய தாக்குதல் தொடுத்தனர். 2 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் என்ற வலுவான நிலையில் ஆடிக்கொண்டிருந்த ஆப்கனுக்கு பும்ரா அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். நங்கூ 2ம் பாய்ச்சி நின்ற ரஹ்மத் (36) ஹஸ்மதுல்லா (21) ஆகியோரை இரட்டை அடி கொடுத்து அடுத்தடுத்து வீழ்த்த இந்தியாவுக்கு ஓரளவு நிம்மதி கிடைத்தது.


ஆனாலும் அடுத்து வந்த ஆப்கன் கேப்டன் நபி அரைசதம் (52) கடந்து ஆப்கன் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல முயல, இந்தியாவுக்கு டென்ஷன் எகிறியது. கடைசி 4 ஓவர்களில் வெற்றிக்கு 32 ரன்கள் என்ற நிலையில் ஆப்கன் இருந்த போது பும் ராவும், சமியும் துல்லியமாக பந்து வீசி, ஆப்கன் ரன் வேகத்தை கட்டுப்படுத்தினர்.


இதனால் கடைசி ஓவரில் 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆப்கன் கைவசம் 3 விக்கெட்டுகளும் இருக்க, ஆட்டத்தில் உச்சகட்ட பரபரப்பு தொற்றிக் கொண்டது. ஷமி வீசிய இந்த ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்த முகமது நபி டென்ஷனை எகிறச் செய்தார். ஆனாலும் நம்பிக்கை தளராமல் பந்து வீசிய ஷமி 2-வது பந்தில் ரன் விட்டுக் கொடுக்கவில்லை. ஆனால் சமியின் அடுத்த 3 பந்துகள் ஆட்டத்தில் பெரும் திருப்புமுனையையே ஏற்படுத்திவிட்டது.


3, 4, 5 -வது பந்துகளில் எஞ்சிய மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்திய சமி ஹாட்ரிக் விக்கெட் சாதனை புரிந்ததுடன் இந்திய அணியையும் 11 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெறச் செய்தார். இந்த உலகக் கோப்பைத் தொடரில் முதல் ஹாட்ரிக் சாதனை புரிந்த வீரர் என்ற சாதனையை படைத்தார் சமி .உலகக் கோப்பை போட்டிகளில் ஹாட்ரிக் சாதனை 2-வது இந்திய வீரர் சமி ஆவார். இதற்கு பின் 1987 உலகக் கோப்பை போட்டியில் சேதன் சர்மா, நியூசிலாந்துக்கு எதிராக ஹாட்ரிக் சாதனை படைத்திருந்தார்.


ஆப்கனுக்கு எதிராக போராடி பெற்ற இந்த வெற்றி, உலகக்கோப்பை போட்டிகளில் இந்தியாவுக்கு 50-வது வெற்றியாகும். இந்த வெற்றி மூலம் இந்த உலகக் கோப்பை தொடரில் இதுவரை தோல்வி காணாத அணியாக திகழ்கிறது இந்தியா. புள்ளிப் பட்டியலிலும் 10 புள்ளிகளுடன் 3-வது இடத்துக்கு முன்னேறி அரையிறுதி வாய்ப்பில் பிரகாசமாக ஜொலிக்கிறது என்றே கூறலாம்.

You'r reading உலகக் கோப்பை கிரிக்கெட் கடைசி வரை தில் காட்டிய ஆப்கன்... இந்தியா த்ரில் வெற்றி Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை