கொல்கத்தாவில் பிரதமர் மோடியின் மனைவி ஜசோதாபென்னை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்தார். இருவரும் பரஸ்பரம் வாழ்த்து தெரிவித்தனர்.
மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி இன்று(செப்.18) மாலை 4.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசவிருக்கிறார். இதற்காக அவர் நேற்று மாலை கொல்கத்தாவில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டார். கொல்கத்தா விமானநிலையத்திற்கு அவர் வந்த போது, பிரதமர் மோடியின் மனைவி ஜசோதாபென் அங்கு வந்திருந்தார்.
குஜராத்தில் வசிக்கும் ஜசோதாபென், ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் அருகே ஆசன்சாலில் உள்ள கல்யானேஸ்வரி கோயிலுக்கு சென்று விட்டு திரும்பியிருந்தார். அவர் 2 நாள் பயணத்தை முடித்து கொண்டு சொந்த ஊருக்கு செல்வதற்காக கொல்கத்தா விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அங்கு அவரும், மம்தாபானர்ஜியும் சந்தித்து கொண்டனர். இருவரும் பரஸ்பரம் வாழ்த்து தெரிவித்து கொண்டனர். அப்போது, ஜசோதாபென்னுக்கு ஒரு சேலையை மம்தா பரிசளித்தார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது, மோடியையும், அமித்ஷாவையும் கடுமையாக விமர்சித்தவர் மம்தாபானர்ஜி. இதனால், தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பாஜக, பிரதமர் பதவியேற்பதற்கு முன்பே மேற்கு வங்கத்தில் திரிணாமுல் கட்சியை உடைக்கும் வேலையில் ஈடுபட்டது. இதனால், மம்தா ஆத்திரமடைந்து பிரதமர் பதவியேற்பு விழாவை புறக்கணித்தார். இந்த மோதல் காரணமாக, பிரதமரை மம்தா சந்திக்காமல் இருந்தார்.
மோடி 2வது முறை பிரதமராக பதவியேற்ற பிறகு, இப்போதுதான் முதல்முறையாக அவரை மம்தா பானர்ஜி சந்திக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.