டெல்லியில் டிரான்ஸ்போர்ட் ஸ்டிரைக்.. பள்ளிகள், தொழிற்சாலைகள் மூடல்..

Transport strike in Delhi today against amended Motor Vehicles act schools shut, offices declare holiday

by எஸ். எம். கணபதி, Sep 19, 2019, 09:59 AM IST

புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் போக்குவரத்து வாகனச் சங்கங்களின் சார்பில் இன்று ஒருநாள் வேலைநிறுத்தம் செய்யப்படுகிறது. இதனால், பல பள்ளிகள், தொழிற்சாலைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

புதிய மோட்டார் வாகனச் சட்டம் அமலுக்கு வந்தது முதல் நாடு முழுவதும் போக்குவரத்து விதிமீறல்களுக்கு ஆயிரக்கணக்கில் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த சட்டத்தின்படி, லைசென்ஸ் இல்லாதவர்கள் வாகனம் ஓட்டினால் அபராதத் தொகை 500 ரூபாயில் இருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மிகவேகமாக வாகனத்தை ஓட்டினாலும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படுகிறது. இதே போல், ஒவ்வொரு விதிமீறலுக்கும் பல ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.

டெல்லியில் சில சரக்கு வாகனங்களுக்கு ஓவர் லோடு, பெர்மிட், லைசென்ஸ் இல்லாத காரணங்களுக்காக லட்சத்தையும் தாண்டி அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து, லாரிகள், சரக்கு வண்டிகள், பள்ளி வாகனங்கள், தனியார் பேருந்துகள் என்று பல்வேறு சேவைகளை சேர்ந்த 41 சங்கங்களின் கூட்டமைப்பான போக்குவரத்து சங்கங்களின் ஐக்கிய முன்னணி(யுஎப்டிஏ) சார்பில் இன்று ஒரு நாள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதனால், பள்ளி வாகனங்கள், சரக்கு வாகனங்கள், ஆட்டோ, கேப்ஸ் வாகனங்கள், தனியார் பேருந்துகள் என்று பெரும்பாலான வாகனங்கள் இன்று இயங்கவில்லை. இதையொட்டி பல பள்ளி, கல்லூரிகளும், தனியார் தொழிற்சாலைகளும் விடுமுறை அறிவித்துள்ளன.

யுஎப்டிஏ தலைவர் ஹரீஷ் சபர்வால் கூறுகையில், புதிய மோட்டார் வாகனச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, அதிகாரிகள் இஷ்டத்திற்கு அபராதம் வசூலிக்கிறார்கள். சட்டம் கொண்டு வந்தால் போதுமா? அதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்ய வேண்டாமா? உதாரணமாக, போக்குவரத்து அதிகாரிகளிடம் கேமராக்கள், காலர் மைக் போன்ற எவையும் இல்லை.

அவர்கள் கூறும் விதிமீறல் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் அளவுக்கு சாட்சியங்கள் இல்லை. பிறகு எப்படி அபராதம் செலுத்துவது? அதே போல், உதவி கமிஷனர் அந்தஸ்தில் உள்ள அதிகாரியே அதிகமான அபராதம் விதிக்க முடியும் என்றார்கள். ஆனால், ஆய்வாளர்கள் கூட அதிகமான அபராதம் விதிக்கிறார்கள். எனவே, சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.

You'r reading டெல்லியில் டிரான்ஸ்போர்ட் ஸ்டிரைக்.. பள்ளிகள், தொழிற்சாலைகள் மூடல்.. Originally posted on The Subeditor Tamil

More Delhi News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை