மும்பை ஆரே காலனியில் மரங்களை வெட்டத் தடை.. சுப்ரீம் கோர்ட் அதிரடி..

SC stops tree cutting in Mumbais Aarey till next hearing on October 21

by எஸ். எம். கணபதி, Oct 7, 2019, 13:51 PM IST

மும்பை ஆரே காலனியில் மரங்களை வெட்டுவதற்கு மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், மும்பை புறநகரில் சஞ்சய்காந்தி இயற்கைப் பூங்கா என்ற மிகப்பெரிய வனம் உள்ளது. இதையொட்டி, ஆரே காலனி என்ற குடியிருப்பு பகுதி உள்ளது. இப்பகுதியில் மெட்ரோ ரயில் பணிமனை கட்டுவதற்காக 2,600 மரங்களை வெட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது.

இதை எதிர்த்து சமூக ஆர்வலர் ஜோரு பத்தனா என்பவர் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில், ஆரே காலனி அருகே உள்ள 2,280 ஹெக்டேர் நிலங்களையும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவித்து, மரங்கள் வெட்ட தடை விதிக்க வேண்டுமென்று கோரியிருந்தார். இம்மனுவை தலைமை நீதிபதி பிரவீன் நந்தரஜோக் தலைமையிலான பெஞ்ச் தள்ளுபடி செய்தது.

இதைத் தொடர்ந்து, அன்றிரவு நள்ளிரவில் மெட்ரோ ரயில் ஊழியர்கள், போலீசாருடன் வந்து ஆரே காலனியில் மரங்களை வெட்டத் தொடங்கினர். சில மணி நேரத்தில் மக்கள் அங்கு குவிந்து, மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை வர விடாமல் போலீசார் தடுப்புகளை அமைத்தனர். ஆனால், அதை தள்ளிக் கொண்டு மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால், நள்ளிரவில் அப்பகுதி போர்க்களம் போல் காணப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் கூறுகையில், நள்ளிரவில் 200 மரங்களை வெட்டி போட்டு விட்டனர். மொத்தம் 2,702 மரங்களை வெட்டப் போவதாகவும், அதில் 464 மரங்களை வேறொரு இடத்தில் நடவிருப்பதாகவும் கூறுகின்றனர். இயற்கையை அழித்தால் இப்பகுதியில் உள்ள மக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தினர். ஆதிவாசி மக்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றிருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், சட்டமாணவர்கள் சிலர் சுப்ரீம் கோர்ட்டுக்கு அனுப்பிய கடிதத்தில், ஆரே காலனியில் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் மரங்களை வெட்டுவதற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டுமென்று கோரினர். இந்த கடிதத்தின் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட் தானாகவே பொது நல வழக்கு எடுத்து, ஆரே காலனியில் மரங்களை வெட்டுவதற்கு மும்பை மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு தடை விதித்தது. மேலும், இது வரை எத்தனை மரங்கள் வெட்டப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட விவரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மகாராஷ்டிர அரசுக்கும் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணையை வரும் 21ம் தேதிக்கு தள்ளி வைத்தது.

You'r reading மும்பை ஆரே காலனியில் மரங்களை வெட்டத் தடை.. சுப்ரீம் கோர்ட் அதிரடி.. Originally posted on The Subeditor Tamil

More Mumbai News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை