சிதம்பரம் உடல்நிலையை ஆராய எய்ம்ஸ் டாக்டர்கள் குழு அமைக்க வேண்டும் என்றும், அவரது சிகிச்சை தொடர்பாக அந்த குழுவினர் நாளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் டெல்லி ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைதான முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் கடந்த 70 நாட்களாக திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு சிபிஐ வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஜாமீன் அளித்தது. ஆனால், அதற்கு முன்பாக அமலாக்கத் துறை வழக்கில் அவரை கைது செய்து விட்டனர். இதன்பின், அவர் திகார் சிறையில் இருந்து அமலாக்கத் துறையின் காவலுக்கு அனுப்பப்பட்டார்.
இந்த காவல் முடிந்து நேற்று (அக்.30) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை அமலாக்கத் துறையினர் மேலும் ஒரு நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரினர். அதை நீதிமன்றம் நிராகரித்தது. அத்துடன் சிதம்பரத்தை நவம்பர் 13ம் தேதி வரை சிறைக் காவலில் வைக்கவும் உத்தரவிட்டது.
இதற்கிடையே, சிதம்பரத்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அவரது எடை 73 கிலோவில் இருந்து 66 கிலோவாக குறைந்தது. எனவே அவருக்கு மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் இடைக்கால ஜாமீன் அளிக்க வேண்டுமென்று கோரி, டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுைவ விசாரித்த ஐகேகார்ட் நீதிபதிகள், சிதம்பரம் உடல்நிலையை ஆய்வு செய்ய எய்ம்ஸ் டாக்டர்கள் குழு அமைக்க வேண்டும்.
அந்த குழுவில் இரைப்பை குடல் இயல் மருத்துவர் நாகேஸ்வரராவ் இடம் பெற வேண்டும். இந்த குழு இன்று ஆய்வு செய்து நாளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதில் அவர் மருத்துவமனையில் தனியாக வைத்து கவனிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளாரா என்பதை தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.