திருவள்ளுவருக்கு காவியா? பாஜகவை விமர்சித்த சிதம்பரம்..

Chidambaram hits out at PM over his remarks in Bangkok

by எஸ். எம். கணபதி, Nov 6, 2019, 09:13 AM IST

பாஜகவினர், திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்ததை ப.சிதம்பரம், ஒரு திருக்குறளைக் கூறி விமர்சித்துள்ளார்.

ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு சி.பி.ஐ வழக்கில் ஜாமீன் கிடைத்தாலும், அமலாக்கத் துறை வழக்கில் கைதாகி சிறையிலேயே இருக்கிறார். ஆனாலும், அவர் தனது குடும்பத்தினர் மூலம் ட்விட்டரில் மத்திய அரசையும், பாஜகவையும் கடுமையாக விமர்சித்து பதிவுகள் போட்டு வருகிறார்.

தமிழக பாஜக ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட திருவள்ளுவர் படத்தில் அவர் காவி உடையில் நெற்றியில் விபூதி பட்டை போட்டிருந்தார். இது திராவிடக் கட்சிகளை உசுப்பேத்தி விட்டது. திருவள்ளுவருக்கு மதமே கிடையாது, அவரை இந்துவாக சித்தரிப்பது தவறு என்று கொதித்தனர்.

இந்த விவகாரம் குறித்து, ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவுகள் வருமாறு:

தமக்கு ஒரு நாள் காவி உடை தரிப்பார்கள் என்று உணர்ந்தே திருவள்ளுவர் ஒரு குறளை இயற்றினார் என்று தோன்றுகிறது.

"நாணாமை நாடாமை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்"

பழி பாவங்களுக்கு வெட்கப்படாமையும், நன்மையானவற்றை நாடாமையும், அன்பு இல்லாமையும், நன்மையானவற்றை விரும்பாமையும் பேதையின் தொழில்கள்.
இவ்வாறு பதிவிட்டிருக்கிறார்.

இதே போல், தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் பிரதமர் மோடி பேசியதை குறிப்பிட்டும் சிதம்பரம் பதிவிட்டிருக்கிறார். அதில் அவர், இந்தியாவின் உயர்வுகள், வீழ்ச்சிகள் குறித்து பிரதமர் மோடி, பாங்காக்கில் குறிப்பிட்டிருக்கிறார். அதில் சிலவற்றை அவர் விட்டு விட்டார். முதலீடுகள் வீழ்ச்சி, முக்கிய துறைகளின் வளர்ச்சி விகிதம் வீழ்ச்சி, தொழில்களுக்கான கடன்கள் வீழச்சி, நுகர்வு குறியீடு வீழ்ச்சி, வர்த்தகம் வீழ்ச்சி போன்றவற்றை பிரதமர் சொல்லாமல் விட்டு விட்டார் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

You'r reading திருவள்ளுவருக்கு காவியா? பாஜகவை விமர்சித்த சிதம்பரம்.. Originally posted on The Subeditor Tamil

More Delhi News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை