கார்ட்டோசாட் செயற்கைகோளை சுமந்து செல்லும் பி.எஸ்.எல்.வி-சி47 ராக்கெட் வரும் 25ம் தேதிக்கு பதிலாக வரும் 27ம் தேதி காலை 9.28 மணிக்கு விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு கழகம்(இஸ்ரோ), பூமி ஆராய்ச்சிக்காக கார்ட்டோசாட் என்று பெயரிடப்பட்ட முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்படும் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. இதுவரை கார்ட்டோசாட் வரிசையில் 8 செயற்கை கோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளன.
இந்நிலையில், 9-வது செயற்கைகோளாக கார்ட்டோசாட்-3 என்ற செயற்கைகோளை இஸ்ரோ உருவாக்கியுள்ளது. ஏற்கனவே விண்ணில் ஏவப்பட்ட கார்ட்டோசாட் செயற்கைகோள்களை விட அதிக சக்திவாய்ந்த செயற்கை கோள் ஆகும். இதில், பூமியின் மேற்பரப்பை மிக துல்லியமாகவும், தெளிவாகவும் படம் எடுத்து அனுப்பும்.
இந்த செயற்கைகோளை வரும் 25ம் தேதி காலை 9.28 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி-சி47 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது.
தற்போது பி.எஸ்.எல்.வி-சி47 ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வரும் 27ம் தேதி காலை 9.28 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் 2வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.