காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் இன்று டெல்லியில் கூடி, மத்திய அரசை கண்டித்து கூட்டாக போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்கவுள்ளனர்.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கனிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து கடந்த 2014ம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவில் தஞ்சம் அடைந்த முஸ்லிம்கள் அல்லாத 6 மதத்தினருக்கு மட்டும் குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை(சிஏஏ) மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ளது. இது சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிரானது என்று கூறி, எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியதுடன் தொடர்ந்து போராட்டம் நடத்தின.
இதே போல், முஸ்லிம் அமைப்புகளும், மாணவர் இயக்கத்தினரும் போராட்டம் நடத்தினர். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டதால் அது அமலுக்கு வந்துள்ளது.இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு கூட்டம், டெல்லியில் நேற்று(ஜன.12) நடைபெற்றது. கட்சித் தலைவர் சோனியா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மன்மோகன்சிங், ஏ.கே.அந்தோனி உள்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.
இதில், சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டங்களை தொடர்ந்து நடத்துவது, டெல்லி சட்டசபைத் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. குடியுரிமை திருத்தச் சட்டம், பொருளாதார சரிவு உள்ளிட்ட பிரச்னைகளில் மத்திய அரசை எதிர்த்து எதிர்க்கட்சிகளுடன் இணைந்து கூட்டாக போராடுவது குறித்தும் விவாதிக்கப்பட்து.
கூட்டத்திற்கு பின்பு, மத்திய அரசை கண்டித்து கூட்டாக போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்க வருமாறு எதிர்க்கட்சிகளுக்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்திருக்கிறார். இதன்படி, டெல்லியில் இன்று மாலையில் அந்த ஆலோசனை கூட்டம் சோனியா காந்தி தலைமையில் நடைபெறவுள்ளது.
இதில் திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், ஆர்ஜேடி உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர். சமாஜ்வாடி கட்சியும் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பகுஜன் சமாஜ் கட்சி இது வரை காங்கிரசுடன் இணைந்து செயல்பட முன்வரவில்லை. அதே போல், மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் தலைவருமான மம்தா பானர்ஜியும், காங்கிரஸ் தலைமையில் போராட விரும்பவில்லை. அந்த கட்சிகள் இந்த கூட்டத்தைப் புறக்கணிக்கும் என கூறப்படுகிறது.