சிஏஏவுக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கமிஷன் சுப்ரீம் கோர்ட்டில் மனு..

by எஸ். எம். கணபதி, Mar 4, 2020, 10:36 AM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு(சிஏஏ) எதிராக டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருக்கிறது. இதற்கு இந்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மத்திய பாஜக அரசு கடந்த டிசம்பரில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை(சிஏஏ) கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்த சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்து அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து கடந்த 2014ம் ஆண்டுக்கு முன்பாக இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து இங்கு வசிக்கும் இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சி இனத்தவர், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்று இந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்கள் மட்டும் இதில் இடம் பெறவில்லை. அதனால், மதரீதியாக இந்த சட்டம் அமைந்துள்ளதால், அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று கூறி, எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

இதற்கிடையே, குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ், திரிணாமுல், திமுக உள்பட எதிர்க்கட்சிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள், சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளன.

இதற்கிடையே, சிஏஏ சட்டத்தை இஸ்லாமிய நாடுகள் அமைப்பு மற்றும் சில சர்வதேச அமைப்புகள் விமர்சித்துள்ளன. மலேசியா, துருக்கி, ஈரான் நாடுகளும் இச்சட்டத்தை விமர்சித்தன. இவற்றுக்கு இந்திய அரசு சார்பில், இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதா? என கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஜெனீவாவில் ஐ.நா.மனித உரிமை கமிஷனின் 43வது கூட்டம் நடைபெற்ற போது, ஐ.நா.மனித உரிமை கமிஷனர் மிச்சேல் பேச்லெட், இந்தியாவின் சிஏஏ சட்டத்தின் மீது அதிருப்தி தெரிவித்தார். இந்திய வெளியுறவுத் துறை அதிகாரி விகாஸ் சுவரூப்பிடம், சிஏஏ தொடர்பாக இந்திய சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்யவிருப்பதாகவும் கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து, ஐ.நா. மனித உரிமை கமிஷனர் மிச்சேல் பேச்லெட், டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்திருக்கிறார். சிஏஏவுக்கு எதிரான வழக்கில் தன்னையும் சேர்த்து கொள்ள வேண்டுமென்று அதில் கோரியிருக்கிறார். இந்திய நீதிமன்ற நடைமுறைகளின்படி தான் செயல்படவிருப்பது குறித்து ஏற்கனவே ஜெனீவாவில் இந்தியத் தரப்பிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறியிருக்கிறார். இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவும் அதிகாரியாகச் செயல்பட தங்களை நியமிக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இதற்கு இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ரவீஸ் குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். சிஏஏ விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். இதில் வெளிநாட்டினர் யாரும் தலையிட உரிமை கிடையாது. இந்திய இறையாண்மைக்கு எதிராக யாரும் செயல்படுவதை அனுமதிக்க முடியாது. இதை நீதிமன்றத்தில் தெரிவிப்போம் என்றார்.

You'r reading சிஏஏவுக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கமிஷன் சுப்ரீம் கோர்ட்டில் மனு.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை