கோயில் ஊழியர்கள் இந்து உறுதிமொழி எடுக்க ஐகோர்ட் உத்தரவு..

by எஸ். எம். கணபதி, Mar 4, 2020, 10:47 AM IST

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் உள்ள அனைத்து அதிகாரிகளும், ஊழியர்களும் இந்து உறுதிமொழியை எடுக்க வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.



சென்னை ஐகோர்ட்டில் ஸ்ரீதரன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின்படி, கோயில் ஊழியர்கள் அனைவருமே இந்து மதத்தைப் பின்பற்றுபவர்களாக இருக்க வேண்டும். அறநிலையத்துறையில் யார் பணியில் சேர்ந்தாலும், கோயில் நிர்வாக அதிகாரி மற்றும் 2 சாட்சிகள் முன்னிலையில் சாமி சிலை முன்பாக நின்று, இந்து என்பதற்கான உறுதிமொழி எடுக்க வேண்டும். ஆனால், கோயில்களில் பணியாற்றும் யாருமே இப்படி உறுதிமொழி எடுப்பதில்லை. எனவே, அறநிலையத்துறை சட்டப்பிரிவு 10-ன்படி, கோயில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தாங்கள் இந்து என்றும், இந்த மதத்தையே பின்பற்றி வருவதாகவும் உறுதிமொழி எடுக்க உத்தரவிட வேண்டும். உறுதிமொழி எடுக்காதவர்களை அந்த பொறுப்பிலிருந்து நீக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அறநிலையத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளடர் கார்த்திகேயன், அறங்காவலர்கள் மற்றும் நிர்வாகிகள் இந்த உறுதி மொழி எடுத்திருப்பதாகவும், ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் அரசு ஊழியர்கள் என்பதால் இதுவரை இந்து என்று உறுதிமொழி எடுக்கவில்லை என்றும் கூறினார்.

இதை கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:
இந்து அறநிலையத்துறை விதிகளின்படி, கோவிலில் பணியாற்றும் அனைத்து அதிகாரிகளும், ஊழியர்களும் 8 வாரத்தில் சாமி சிலை முன்பு தாங்கள் இந்து என்றும் இந்த மதத்தை பின்பற்றுவதாகவும் உறுதிமொழி எடுக்க வேண்டும்.

மேலும், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு நியமிக்கப்படும் அனைத்து அதிகாரிகளும், ஊழியர்களும் இந்த உறுதிமொழியை எடுக்க வேண்டும் என்ற விதியை முறையாகப் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

You'r reading கோயில் ஊழியர்கள் இந்து உறுதிமொழி எடுக்க ஐகோர்ட் உத்தரவு.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை