பாஜக கூட்டணிக் கட்சிகள் ஆளும் பீகார், தெலுங்கானா, ஆந்திரா போன்ற மாநிலங்களின் சட்டமன்றங்களில் என்பிஆருக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், தமிழக அரசு என்பிஆர் விவகாரத்தில் அடாவடித்தனமாகச் செயல்படுவது கண்டிக்கத்தக்கது என்று வி.எம்.எஸ்.முஸ்தபா கூறியுள்ளார்.
தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கை:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி ஆகிய கருப்பு சட்டங்களுக்கு எதிராக மக்கள் பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன. தமிழகத்திலும் சென்னை வண்ணாரப்பேட்டை, மதுரை, கடலூர் என பல்வேறு மாவட்டங்களிலும் இஸ்லாமியப் பெண்கள் கடந்த 20 நாட்களுக்கு மேலாகத் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். என்பிஆருக்கு எதிராகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினால் மட்டுமே இந்த போராட்டங்களைத் திரும்பப் பெறுவோம் என அவர்கள் அறிவித்தனர்.
சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் நடைபெற்ற போது எதிர்க்கட்சிகள் தமிழக அரசைப் பலமுறை வற்புறுத்திய போதும், இது தொடர்பாகத் தெளிவான எந்த முடிவையும் சபாநாயகர் அறிவிக்காமல், அந்த கூட்டம் முடிவடைந்தது. மானிய கோரிக்கை மீதான விவாதம் 23 நாட்கள் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தொடரிலாவது என்பிஆருக்கு எதிராகத் தீர்மானத்தைத் தமிழக அரசு கொண்டு வரும் என போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இஸ்லாமிய மக்கள் அனைவரும் நம்பியிருந்தனர். ஆனால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு எதிராகச் சட்டசபையில் தீர்மானம் கொண்டு வர முடியாது என அமைச்சர் உதயகுமார் தெரிவித்திருப்பது, ஆணவத்தின் உச்சமாகும்.
பாஜக கூட்டணியில் இருக்கக்கூடிய கட்சிகள் ஆளும் மாநிலமான பீகார், தெலுங்கானா, ஆந்திரா போன்ற மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், தமிழக அரசு என்பிஆர் விவகாரத்தில் அடாவடித்தனமாகச் செயல்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களின் கோரிக்கைகளை அமைச்சர் உதயகுமார் தனது பேச்சால் கொச்சைப்படுத்தி விட்டார். இதனால் தமிழக அரசு மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை இழந்துவிட்டனர். இனியும் பாஜகவிற்குத் துணை போகும் செயலை தவிர்த்து விட்டு, தமிழகச் சட்டமன்றத்தில் என்பிஆருக்கு எதிரான தீர்மானத்தைக் கால தாமதம் செய்யாமல் நிறைவேற்ற வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு முஸ்தபா கூறியுள்ளார்.