என்.பி.ஆரை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற அதிமுக பயப்படுவது ஏன்?

by எஸ். எம். கணபதி, Mar 11, 2020, 16:53 PM IST

ஊழல், லஞ்சப் புகார்களால் சிறைக்குப் போக வேண்டியிருக்கும் என்று அதிமுக ஆட்சியாளர்கள் பயப்படுவதால், என்.பி.ஆரை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் போட மறுக்கிறார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சி.ஏ.ஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர். சட்டங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவோரை அழைத்துப் பேச வேண்டும் என்ற கோரிக்கையைத் தமிழக அரசு ஏற்க மறுத்ததால், சட்டசபையிலிருந்து திமுக உறுப்பினர்கள் இன்று(மார்ச்11) வெளிநடப்பு செய்தனர். அதன்பின், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:

என்பிஆர் கணக்கெடுப்பை நடத்தக் கூடாது, அதைச் சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி, ஏற்கனவே பல நாட்களாக வண்ணாரப்பேட்டை, மண்ணடி பகுதியில் மக்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

என்பிஆர் சட்டம் அமல்படுத்தப்பட மாட்டாது எனத் தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றும் வரை இந்தப் போராட்டம் ஓயாது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எனவே, சபையில் உடனடியாக தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்திச் சொன்னேன்.

இதற்கு வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், ஏற்கனவே என்னென்ன தவறான விளக்கங்களைச் சொல்லிக் கொண்டிருந்தாரோ, அதே விளக்கங்களைத்தான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார். இந்தச் சட்டத்தால் எந்த மக்களுக்கும் பாதிப்பில்லை. குறிப்பாகச் சிறுபான்மை சமுதாயத்தைச் சார்ந்த மக்களுக்குப் பாதிப்பில்லை என்று தொடர்ந்து தவறான தகவலை அவையில் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார். இந்தச் சட்டத்தால் என்னென்ன பாதிப்புகள் இருக்கிறது என்று நான் எடுத்துச் சொன்னேன்.

ஏற்கனவே 13 மாநிலங்களில் அந்தந்த மாநில முதலமைச்சர்கள் இதைக் கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள். குறிப்பாக, பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் இதைக் கடுமையாக எதிர்த்துத் தீர்மானம் போட்டிருக்கிறார். அதேபோல், நாடாளுமன்றத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி இந்தச் சட்டத்தை ஆதரித்து வாக்களித்திருந்தாலும், ஆந்திர மாநில சட்டமன்றத்தில் அந்தக் கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான ஜெகன்மோகன், எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்றி உள்ளார். இந்தச் சட்டத்தை முதலில் ஆதரித்த நிலையில் தெலுங்கானா மாநில முதலமைச்சரும் இதை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்.

கேரள சட்டமன்றத்தில் இதை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியது மட்டுமின்றி நீதிமன்றத்திற்குச் சென்று வழக்கும் போட்டுள்ளனர். புதுவை மாநிலத்திலும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்கள். மம்தா பானர்ஜி ஆளும் மேற்கு வங்கத்திலும் இதை எதிர்த்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தொடர்ந்து எல்லா மாநிலங்களும் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் சட்டங்களை எதிர்த்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. வண்ணாரப்பேட்டை, மண்ணடி பகுதியில் இரவு பகல் பாராமல் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். அவர்களை அழைத்துப் பேசி, அவர்களது கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், அந்தச் சட்டத்தை எதிர்த்து தீர்மானம் போட வேண்டும் என்று எடுத்துச் சொன்னோம். அதற்கு அவர்கள் செவிமடுக்கவில்லை. அதனால் அதைக் கண்டித்து எங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் வெளிநடப்பு செய்திருக்கிறோம்.

அதிமுக அரசு, என்பிஆர் தொடர்பாக மத்திய அரசிடம் விளக்கம் கேட்டிருப்பதாகக் கூறுகிறது. மக்களுடைய அச்சத்தை போக்குவதற்காக அல்ல; அவர்கள் (ஆட்சியாளர்கள்) அச்சத்துடன் இருக்கிறார்கள். இந்தச் சட்டத்தை எதிர்த்துத் தீர்மானம் போட்டால் அவர்களது ஆட்சி போய்விடும் என்று பயப்படுகிறார்கள். ஆட்சி போவது மட்டுமல்ல; இவர்கள் மீதான ஊழல், லஞ்சப் புகார்கள், சிபிஐ விசாரணை போன்ற அத்தனை விவகாரமும் மத்திய அரசின் வசம் உள்ளது. அவர்கள் சிறையில் இருக்க வேண்டும். அந்தப் பயத்தால்தான் இந்தச் சட்டத்தை எதிர்த்து தீர்மானம் போடப் பயப்படுகிறார்கள்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

READ MORE ABOUT :

Leave a reply