துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானம், கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஓடுபாதையில் சறுக்கி விபத்து ஏற்பட்டது. இதில் 2 பைலட் உள்பட 15 பேர் உயிரிழந்தனர். 127 பேர் காயமடைந்தனர். இது பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உலகில் பல நாடுகளில் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வந்தனர். இதையடுத்து, வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்களை மத்திய அரசு இயக்கத் தொடங்கியது.
துபாயில் சிக்கித் தவித்த 10 குழந்தைகள் உள்பட 185 பேர், நேற்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்(AXB1344) மூலம் கேரள மாநிலம் கோழிக்கோடு அழைத்து வரப்பட்டனர். அவர்களில் 3 பேர் தமிழகத்தின் ஊட்டியைச் சேர்ந்தவர்கள். இந்தப் பயணிகளுடன் தலைமை பைலட்டாக தீபக் சாத்தே, இணை பைலட்டாக அகிலேஷ்குமார் 4 பணிப்பெண்கள் என்று மொத்தம் 191 பேர் இருந்தனர்.துபாயில் இருந்து நேற்று பிற்பகல் 3 மணிக்குப் புறப்பட்ட அந்த விமானம் இரவு 7.41 மணிக்கு கரிப்பூரில் உள்ள கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. பலத்த மழை பெய்ததால், விமானத்தைத் தரை இறக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
இரண்டு முறை மேலே சென்றும், கீழே வந்துமாக விமானத்தைத் தரையிறக்க பைலட் முயற்சித்தார். கடைசியில், விமானம் தரையிறங்கும் போது ஓடுபாதையில் மேடான பகுதியில் மோதியது. அப்போது ஓடுபாதையில் சறுக்கிக்கொண்டு வேகமாக ஓடிய விமானம், அருகில் உள்ள 35 அடி பள்ளத்தில் சாய்ந்து இரண்டாக உடைந்தது. விமானி அறையில் இருந்து முன்பக்க கதவு உள்ள பகுதி வரை விமானம் பிளந்து காணப்பட்டது. விமானத்தில் இருந்தவர்கள் கூக்குரலிட்டனர்.
விமான நிலையத்தில் இருந்தவர்கள் இந்த சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து பரபரப்பாகி, மீட்புப் பணிகளைத் தொடங்கினர். தீயணைப்பு வாகனங்களும், ஆம்புலன்சுகளும் வரவழைக்கப்பட்டு, மீட்புப் பணிகள் நடைபெற்றன.இந்த கோர விபத்தில் தலைமை பைலட் கேப்டன் தீபக் சாத்தே, பைலட் அகிலேஷ் குமார் மற்றும் 15 பயணிகள் பலியாகியுள்ளனர். கேப்டன் தீபக் சாத்தே ஏற்கனவே இந்திய விமானப் படையில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளை மீட்கப்பட்டு, மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட பிரதமர் மோடி உடனடியாக கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் விசாரித்தறிந்தார். மேலும், டெல்லியில் விமானப் போக்குவரத்து ஆணையத்தில் அவசரக் கூட்டம் நடத்தி, விபத்து குறித்து விவாதிக்கப்பட்டது.
கோழிக்கோடு விமான நிலையத்திற்கு இன்று கேரள கவர்னர் ஆரிப்முகமதுகான், முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் வந்து நேரில் பார்வையிடுகின்றனர். மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் புரியும் இன்று கோழிக்கோடு வருகிறார். அவர் கூறுகையில், விமானத்தில் மொத்தம் 191 பேர் பயணித்தனர். மழையால் ஓடுபாதையில் விமானம் சறுக்கி, விமானம் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இந்த விபத்தில் 2 பைலட்கள் உள்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர். 127 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். விமானம் இது போன்று தரையிறங்கும் போது தீப்பிடித்து விடும். நல்லவேளையாக, அப்படி நடக்காததால் உயிரிழப்பு அதிகரிக்கவில்லை என்று தெரிவித்தார்.விபத்துக்கான காரணம் குறித்து அறிவதற்காக விமான போக்குவரத்து ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.