ஆந்திராவில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீ.. 7 பேர் பலி, 30 பேர் மீட்பு..

by எஸ். எம். கணபதி, Aug 9, 2020, 10:10 AM IST

ஆந்திராவில் கொரோனா சிகிச்சை மையமாகச் செயல்பட்டு வந்த ஓட்டலில் திடீரென தீப்பிடித்தது. இந்த விபத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர்.ஆந்திராவின் விஜயவாடா நகரில் ஓட்டல் ஒன்றை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றியிருந்தனர். இந்த மையத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட 22 பேர் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு மருத்துவச் சிகிச்சை மற்றும் உணவு வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில், இன்று(ஆக.9) அதிகாலை 5 மணிக்கு ஓட்டல் கட்டிடத்திற்குள் தீப்பிடித்தது. அதிகாலை நேரம் என்பதால் நோயாளிகளும், பணியாளர்களும் தூங்கிக் கொண்டிருந்தனர். தீப்பற்றியதை யாரும் கவனிக்காத நிலையில், சில வினாடிகளில் தீ மளமளவெனப் பரவியது. சிறிது நேரத்தில் கட்டிடத்தின் ஒரு பகுதி முழுக்க தீப்பற்றியது.
தகவலறிந்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்து, ஓட்டலில் சிக்கியவர்களை மீட்டனர். தண்ணீர் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். தீ விபத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர். 30 பேர் வரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்துக்கு மின்சாரக் கசிவு காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.ஏற்கனவே கடந்த 2 நாட்களுக்குக் குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரில் உள்ள கொரோனா மருத்துவமனையில் இதே போல் தீ விபத்து ஏற்பட்டு 8 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கும் மின்கசிவுதான் காரணம் என்று கூறப்பட்டது.


More India News

அதிகம் படித்தவை