கொரோனா காரணமாக உலகம் முழுவதும் பல கோடி பேர் வேலையும், வருமானமும் இழந்து தவித்து வருகின்றனர். வளைகுடா நாடுகள், அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளுக்கு வேலைக்காகச் சென்ற லட்சக்கணக்கானோர் வேலை இழந்து சொந்த நாட்டுக்குத் திரும்பி வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் வேலை இழந்தவர்கள் மற்றும் சுற்றுலா விசா உள்பட பல்வேறு காரியங்களுக்காக வெளிநாடுகளில் சென்று ஊரடங்கு சட்டம் காரணமாக அங்குச் சிக்கியவர்களை மீட்க 'வந்தே பாரத்' திட்டத்தைக் கடந்த மே மாதம் மத்திய அரசு கொண்டுவந்தது.
இதன்படி இந்தியாவிலிருந்து அமெரிக்கா, வளைகுடா நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளுக்கு விமானங்களை அனுப்பி அங்குச் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டனர்.இதன்படி கடந்த 3 மாதங்களில் அமெரிக்கா,சீனா மற்றும் வளைகுடா நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து கேரளாவுக்கு மட்டும் இதுவரை 3 லட்சத்து 71 பேர் வந்துள்ளனர். இவர்களில் 2 லட்சத்து 70 ஆயிரத்து 250 பேர் மலையாளிகள் ஆவர். மற்றவர்கள் தமிழ்நாடு, ஆந்திரா கர்நாடகா மற்றும் புதுச்சேரி உள்பட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். கேரளாவில் திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு மற்றும் கண்ணூர் விமான நிலையங்கள் வழியாக இவர்கள் வந்தனர். மாலத்தீவில் சிக்கியவர்கள் கப்பல்கள் மூலம் கேரளாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.