மிதக்கும் ஹோட்டல், மிதக்கும் வீடு, மிதக்கும் பூங்கா என நாம் ஏராளம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் கேரளாவில் ஒரு மிதக்கும் வங்கி செயல்பட்டு வருகிறது. கேரளாவில் எப்போதுமே மழை மிக அதிகமாகப் பெய்யும். குறிப்பாகக் கடந்த இரு வருடங்களாகக் கேரளாவில் மிக அதிக அளவில் மழை பெய்ததால் கடும் வெள்ளப்பெருக்கும், சேதமும் ஏற்பட்டது. இந்த வருடமும் கேரளாவில் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் மழை பெய்தது. இதனால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
குறிப்பாக ஆலப்புழா மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் எப்போதுமே வெள்ளத்தில் மூழ்கி இருக்கும். நாம் நமது வீடுகளில் பைக், கார் போன்ற வாகனங்களை வைத்திருப்பது போல இங்கு பெரும்பாலான வீடுகளில் சொந்தமாகச் சிறிய படகுகளை வைத்திருப்பார்கள். இதில் தான் அவர்கள் பெரும்பாலும் வெளியிடங்களுக்குச் செல்வார்கள். இந்நிலையில் கடந்த சில வாரங்களாகப் பெய்த கன மழையால் இங்கு வழக்கம் போல பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. ஆலப்புழா அருகே உள்ள கைநகரி என்ற இடத்தில் ஒரு கூட்டுறவு வங்கி உள்ளது. தொடர் மழையால் இந்த வங்கியைச் சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் வங்கியைத் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஒரு வாரத்திற்கும் மேல் வங்கி மூடப்பட்டதால் வாடிக்கையாளர்கள் கடும் அவதியடைந்தனர்.
இதையடுத்து வாடிக்கையாளர்களின் சிரமத்தைப் போக்க வங்கியை எப்படிச் செயல்படுத்தலாம் என்று அதிகாரிகள் யோசித்தனர். இந்த யோசனை தான் மிதக்கும் வங்கியாக உருவெடுத்தது. தற்போது ஆலப்புழாவில் சுற்றுலாப் பயணிகள் யாரும் வராததால் பல படகுகள் காலியாக உள்ளன. இதையடுத்து அதில் ஒரு படகை வாடகைக்கு எடுத்து அதை வங்கியாக மாற்றத் தீர்மானித்தனர். அதன்படி ஒரு படகில் இந்த கூட்டுறவு வங்கி நேற்று முதல் செயல்பட்டு வருகிறது. வங்கியின் செயல் பாட்டுக்குத் தேவைப்படும் பணம் மற்றும் நகைகள் தினமும் தலைமை அலுவலகத்திலிருந்து கொண்டுவரப்படும். வேலை முடிந்த பின்னர் மாலையில் உடனடியாக பணம் மற்றும் நகைகள் தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும். தற்போது இந்த மிதக்கும் வங்கிக்குப் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தினமும் ஏராளமான வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியுடன் வந்து தங்கள் வங்கி தேவைகளை முடித்து விட்டுச் செல்கின்றனர்.