கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான பள்ளி, கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. பல மாநிலங்களில் கல்லூரிகளில் இறுதி பருவத்தேர்வு தவிர மற்ற பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆனால் இறுதி பருவத் தேர்வை ரத்துசெய்ய யுஜிசி மறுத்துவிட்டது. செப்டம்பர் 31ம் தேதிக்குள் தேர்வை நடத்த வேண்டும் என்று யுஜிசி கூறி வருகிறது. ஆனால் இதற்குப் பல மாநில அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, செப்டம்பர் 31ம் தேதிக்குள் இறுதி பருவ தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்றும் யுஜிசி சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இறுதி பருவத் தேர்வு நடத்தாமல் சான்றிதழ் வழங்கும் அதிகாரம் பல்கலைகளுக்கு இல்லை என்றும் யுஜிசி தெரிவித்தது.
இதை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், செப்டம்பர் 31க்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க யுஜிசிக்கு அனுமதி அளித்தது. இந்த முடிவை அமல்படுத்த மாநிலங்களுக்குப் பொறுப்பு உள்ளது. யுஜிசியின் தேர்வுகளை நடத்துவதற்கான அதிகாரம் மாநிலங்களுக்கு உண்டு. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் யுஜிசி எடுக்கும் முடிவை அமல்படுத்த வேண்டிய பொறுப்பு மாநிலங்களுக்கு இருக்கிறது. தேர்வைத் தள்ளி வைக்க வேண்டுமென்றால் மாநிலங்கள் யுஜிசியிடம் முன் அனுமதி பெறவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.