மற்ற மாநிலங்களைப் போலவே கேரளாவிலும் கடந்த சில மாதங்களாக கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த மே மாதம் வரை ஒருநாளில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 100க்கும் குறைவாகவே இருந்தது. ஆனால் தற்போது இந்த எண்ணிக்கை 2,500ஐ தாண்டிவிட்டது. நேற்று தான் மிக அதிகமாக 2,541 பேர் இந்நோய்க்குப் பாதிக்கப்பட்டனர். இதுவரை கொரோனா பாதித்து 274 பேர் மரணமடைந்துள்ளனர்.
இந்நிலையில் கேரளாவில் கொரோனா பாதித்து சிகிச்சையில் இருந்த 110 வயது மூதாட்டி ஒருவர் முழுமையாகக் குணமடைந்து வீட்டுக்குத் திரும்பிய சம்பவம் நடந்துள்ளது. மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி அருகே உள்ள ரண்டத்தானி என்ற இடத்தை சேர்ந்த பாத்து என்ற இந்த மூதாட்டிக்குத் தனது மகள் மூலம் நோய் பரவியது. இதையடுத்து கடந்த 18ம் தேதி இவர் மஞ்சேரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
மிக வயதானவர் என்பதால் அவருக்கு ஒரு சிறப்பு மருத்துவக் குழு சிகிச்சை அளித்து வந்தது. இதன் பலனாகப் பூரண குணமடைந்த அவர் இன்று வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.
கேரளாவில் கொரோனா பாதித்துக் குணமடைந்த மிக அதிக வயது உடையவர் என்ற பெருமை 110 வயதான இந்த பாத்துவுக்கு கிடைத்துள்ளது. சிகிச்சை முடிந்து வீட்டுக்குப் புறப்பட்ட அவருக்கு மஞ்சேரி அரசு மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகள்மற்றும் ஊழியர்கள் மலர்க்கொத்து கொடுத்து வழியனுப்பி வைத்தனர். சமீபத்தில் கொல்லம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 105 வயதான ஒரு மூதாட்டியும், எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 103 வயதான ஒரு முதியவரும் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 110 வயதான மூதாட்டிக்குச் சிறப்பான சிகிச்சை அளித்த டாக்டர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்குக் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா பாராட்டு தெரிவித்துள்ளார்.