கேரளா மிகச் சிறிய மாநிலமாக இருந்தாலும் இந்த மாநிலத்தில் திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு மற்றும் கண்ணூர் ஆகிய 4 இடங்களில் சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. இந்த விமான நிலையங்கள் வழியாக வெளிநாடுகளில் இருந்து பெருமளவு தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திற்கு வந்த ஒரு பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தூதரக பார்சலில் தங்கம் பிடிபடுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து கேரளாவில் 4 விமான நிலையங்களிலும் சுங்க இலாகாவினர் தீவிர பரிசோதனை நடத்தி வருகின்றனர்.
ஆனாலும் தங்கம் கடத்துவது குறையவில்லை. தற்போது லாக் டவுன் காலத்தில் கூட இந்த விமான நிலையங்கள் வழியாக தங்கம் கடத்துவது தொடர்கிறது. இந்நிலையில் இன்று காலை சார்ஜாவில் இருந்து திருவனந்தபுரம் வந்த விமானத்தில் ஒருவர் தங்கம் கடத்துவதாக சுங்க இலாகாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் சுங்க இலாகாவினர் தீவிர பரிசோதனை நடத்தினர்.
இதில் தமிழ்நாடு கூடலூரை சேர்ந்த முஹம்மது நாசர் (35) என்பவரின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர் கொண்டு வந்த பேக்குகள் அனைத்தையும் அதிகாரிகள் தீவிரமாக பரிசோதனை செய்தனர். ஆனால் எதுவும் சிக்கவில்லை. அவர் ஒரு மிக்சியும் அதற்கு பயன்படுத்தும் 2 ஜார்களும் கொண்டு வந்திருந்தார். சந்தேகமடைந்த அதிகாரிகள் தீவிரமாக பரிசோதித்தபோது அதனுள் 525 கிராம் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ₹26 லட்சமாகும். இதையடுத்து முஹம்மது நாசரை சுங்க இலாகாவினர் கைது செய்தனர்.