கேரளாவில் நேற்று கொரோனா பாதித்த ஒரு இளம்பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது ஆம்புலன்சில் வைத்து டிரைவர் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு கேரளா முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கேரளாவில் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ், பாஜக உள்பட கட்சியினர் அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தினர். இது குறித்து மாநில மனித உரிமை ஆணையமும், மகளிர் ஆணையமும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. ஆம்புலன்ஸ் டிரைவர் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர் பணியில் இருந்து உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் மேலும் ஒரு இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டது கேரளாவில் அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் சுகாதார ஆய்வாளரே அந்த பெண்ணை பலாத்காரம் செய்தது கேரளாவில் அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொல்லம் அருகே உள்ள குளத்துப்புழா பகுதியை சேர்ந்த ஹோம் நர்சான 24 வயதான இளம்பெண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா அறிகுறிகள் காணப்பட்டன.
இதையடுத்து அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் 14 நாள் வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினர். இதையடுத்து அவர் தனது வீட்டில் தனிமையில் இருந்தார். பின்னர் இவருக்கு நோய் அறிகுறி எதுவும் காணப்படவில்லை. தனிமை காலத்தை முடித்த பின்னர் தனக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழை வாங்குவதற்காக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்துக்கு சென்றார். அங்கு இருந்த சுகாதார ஆய்வாளர் பிரதீப் என்பவரிடம் தனக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் தர வேண்டும் என்று கேட்டுள்ளார்.
மாலையில் வீட்டுக்கு வந்தால் சான்றிதழ் தருவதாக அவர் கூறினார். அதை நம்பி அந்த இளம்பெண் சுகாதார ஆய்வாளர் பிரதீப்பின் வீட்டுக்கு சென்றார். வீட்டில் வைத்து அவர் இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த இளம்பெண் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சுகாதார ஆய்வாளர் பிரதீப்பை கைது செய்தனர். கேரளாவில் அடுத்தடுத்து நடக்கும் இதுபோன்ற சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.