இந்திய-சீன எல்லையில் துப்பாக்கிச் சூடு, பதற்றம்.. மீண்டும் மோதல் ஆரம்பம்..

Firing in Eastern Ladakh where India, China troops in a stand-off.

by எஸ். எம். கணபதி, Sep 8, 2020, 09:18 AM IST

காஷ்மீரின் கிழக்கு லடாக் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே இந்தியா-சீனா படைகள் நேற்று(செப்.7) மாலை மீண்டும் மோதலை தொடங்கியுள்ளன. எல்லையில் துப்பாக்கிச் சண்டை நடந்ததாக ஏ.என்.ஐ. செய்தி தெரிவித்துள்ளது.கிழக்கு லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவத்தினர் கடந்த ஜூன் 15ம் தேதி திடீரென இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் கர்னல் சந்தோஷ்பாபு, தமிழக வீரர் பழனி உள்பட 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.

இதன்பின், இரு நாட்டு ராணுவமும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே குவிக்கப்பட்டது. இதனால், கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது. இதற்கிடையே, இரு நாட்டு ராணுவ கமாண்டர்கள் மட்டத்தில் பல முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் சுமுக உடன்பாடு எட்டப்படா விட்டாலும், எல்லையில் மோதலை தவிர்ப்பது என்றும், இரு நாட்டுப் படைகளும் பிரச்சனைக்குரிய கல்வான் பகுதியில் இருந்து விலகிச் செல்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

ஆனால், சீனா அந்த இடத்தில் மீண்டும் நுழைந்து கூடாரங்களை அமைத்து சில பணிகளைத் தொடங்கியது. இதற்கு இந்தியா வர்த்தக ரீதியாகப் பதிலடி கொடுத்தது. அதன்பின், சீன படைகள் பின்னோக்கிச் சென்றாலும், மீண்டும் இந்திய எல்லைக்குள் முன்னேறியது.இந்நிலையில், நேற்று(செப்.7) மாலை 6 மணியளவில் எல்லையில் இருநாட்டு ராணுவத்தினரும் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டது. இரவு முழுவதும் பதற்றம் நீடித்தது. துப்பாக்கிச் சண்டை நடந்ததாகவும் ஏ.என்.ஐ. செய்தி தெரிவிக்கிறது.

அதே சமயம், இந்தியப் படைகள்தான், பங்காங் ஏரியின் தெற்கு பகுதியில் எல்லைக் கட்டுப்பாடு கோட்டைத் தாண்டி சீனாவுக்குள் ஊடுருவியதாக அந்நாடு குற்றம்சாட்டியுள்ளது. அந்த நாட்டு அரசு பத்திரிகையான குளோபல் டைம்ஸ் பத்திரிகையில் இப்படிக் குற்றம்சாட்டி செய்தி வெளியாகியுள்ளது.கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா சென்றிருந்த இந்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங், அங்குச் சீன பாதுகாப்பு அமைச்சரைச் சந்தித்துப் பேசினார். தற்போது அந்த மாநாட்டில் பங்கேற்ற வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் செல்லவிருக்கிறார். அவரும் நாளை மறுநாள் சீன வெளியுறவு அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இதற்கிடையே இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

You'r reading இந்திய-சீன எல்லையில் துப்பாக்கிச் சூடு, பதற்றம்.. மீண்டும் மோதல் ஆரம்பம்.. Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை