கொங்கு மண்டலத்தில் அதிகரிக்கும் கொரோனா.. கோவை, திருப்பூரில் பரவல்

by எஸ். எம். கணபதி, Sep 8, 2020, 09:12 AM IST

சென்னை மற்றும் கொங்கு மண்டலத்தில் கொரோனா தொற்று பரவல் இது வரை கட்டுப்படவில்லை. கோவையில் தினமும் 500 பேருக்குக் குறையாமல் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் பெரும்பாலும் தளர்த்தப்பட்ட நிலையில், சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோனா பரவல் கட்டுப்படவில்லை. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களிலும் தினமும் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.

மாநிலம் முழுவதும் நேற்று(செப்.7)5776 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 7 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். இது வரை, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 4 லட்சத்து 69,256 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 5930 பேரையும் சேர்த்தால், இது வரை 4 லட்சத்து 10,116 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 89 பேர் பலியானார்கள். இவர்களுடன் சேர்த்து இது வரை 7925 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 51,215 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் நேற்று 949 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இது வரை ஒரு லட்சத்து 42,603 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 330 பேருக்கும், கோவையில் 524 பேருக்கும், கடலூரில் 378 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. திருவள்ளூரில் 248 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 190 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது.செங்கல்பட்டில் இது வரை 28,641 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 18,501 பேருக்கும் கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் பாதிப்பு 26,550 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தொற்று பரவல் குறையவில்லை. இந்நிலையில், தற்போது கொங்கு மண்டலத்தில் புதிதாகத் தொற்று கண்டறியப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கோவையில் தினமும் 500 பேருக்குக் குறையாமல் தொற்று கண்டறியப்படுகிறது. அதே போல், இவ்வளவு நாளாக அதிக அளவில் தொற்று பரவாமல் இருந்த சேலத்தில் 185, ஈரோடு 117, திருப்பூர் 194 பேர் என்று நேற்று புதிதாகத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பஸ் போக்குவரத்து தொடங்கியுள்ளது.


More Tamilnadu News