இந்தியாவில் கல்வியறிவு பெற்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 8வது இடத்தில் உள்ளது. கேரளா வழக்கம்போல முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் 7 வயதுக்கு மேற்பட்டவர்களின் கல்வியறிவு குறித்து தேசிய புள்ளி விவரத் துறை நடத்திய ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது. வழக்கம்போல கேரள மாநிலம் முதல் இடத்தை பிடித்துள்ளது. 96.2 சதவீத கல்வியறிவுடன் கேரளா நாட்டிலேயே அதிக கல்வியறிவு பெற்று மாநிலத்தில் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் உள்ள டெல்லி 88.1 சதவீதமும், உத்தரகாண்ட் 87.6 சதவீதத்துடன் மூன்றாவது இடத்திலும், 86.6 சதவீதத்துடன் இமாச்சலப் பிரதேசம் நான்காவது இடத்திலும் உள்ளது.
அசாம் மாநிலம் 5 ஆவது இடத்தில் இடத்தில் உள்ளது. இதில் வேதனைப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் பீகார் போன்ற மாநிலங்களை விட சில தென்மாநிலங்கள் கல்வியறிவில் மிகவும் பின்தங்கி இருக்கிறது என்பதுதான். குறிப்பாக ஆந்திரா மாநிலம் 66.4 சதவீதத்துடன் நாட்டிலேயே குறைவான கல்வியறிவு பெற்று கடைசி இடத்தில் உள்ளது. கடைசி ஐந்து இடங்களில் உத்திரப் பிரதேசம், தெலங்கானா, பீகார், ராஜஸ்தான், ஆந்திரா ஆகிய மாநிலங்கள் உள்ளன. 82.9 சதவீதத்துடன் தமிழகம் இந்தப் பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. தற்போதும் முதலிடத்தில் உள்ள கேரளா தான் முதலில் 100 சதவீத கல்வியறிவு பெற்ற மாநிலம் என்ற பெருமையைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.