புதிய சுகாதார கழிப்பறைக்கான இந்திய அரசாங்க திட்டம்!

indian government plan for new hygienic toilet

by Loganathan, Sep 11, 2020, 07:19 AM IST

நமது நாட்டில் திறந்த வெளியில் மலம் கழிப்பது குறித்த செய்தியை மீண்டும் மீண்டும் நாம் செய்தித்தாள்களில் படித்து வருகின்றோம். ஏறத்தாழ இது உண்மையில் ஒரு தேசிய குணமாகவே அடையாளம் காணப்படுகின்றது. உலகில் திறந்த வெளியில் மலம் கழிப்பவர்களில் சுமார் 60% பேர் இந்தியாவில்தான் இருக்கின்றார்கள் என்ற நிலைமையே உள்ளது. இந்த எண்ணிக்கை வரும்காலங்களில் உடனடியாகக் குறைந்துவிடும் எனத் தோன்றவில்லை. இந்தியாவின் நகரப் பகுதிகளில் 18 சதவிகிதத்தினர் திறந்த வெளியில் மலம் கழிக்கின்றனர். அதேசமயம் கிராமப் பகுதிகளில் 69 சதவிகித மக்கள் திறந்த வெளியில் மலம் கழிக்கின்றனர்.

கழிப்பறை வசதி இல்லாத அம்சம் கல்வித்துறையில்கூட உடனொத்த பாதிப்பை ஏற்படுத்துவதைப் பார்க்க முடிகிறது. பெரும்பாலான கிராமப்புறப் பள்ளிக்கூடங்களில் மாணவர், மாணவியர் என இருபாலரும் சேர்ந்தே படிக்கின்றனர். ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக ஆசிரியர்களை நியமித்து தனித் தனியாகப் பள்ளிக்கூடங்கள் நடத்துகின்ற செலவு தாக்குப்பிடிக்க முடியாது என்பதால்தான் இருபாலர் பள்ளிகள் நடத்தப்படுகின்றன. பெரும்பாலான உயர்நிலைப் பள்ளிகளில் மாணவிகள் பூப்படைந்த உடனேயே பள்ளிக்கூடத்தை விட்டு நின்று விடுகிறார்கள். இந்தப் பள்ளிக் கூடங்களில் மாணவிகள் தங்களது சுத்தத்தைப் பேணிக்கொள்வதற்குக் கழிப்பறைகள் இல்லாததுதான் இதற்குக் காரணம் ஆகும்.

சுகாதார சீர்கேடு
திறந்த வெளியில் மலம் கழிப்பது அழகுணர்ச்சி சம்பந்தப்பட்டது மட்டும் அல்ல. இது மிகப்பெரிய சுகாதாரக் கேட்டுக்கும் வழி வகுக்கின்றது. ஓடைகள், குளங்கள் மற்றும் ஏரிகள் போன்ற நீர் ஆதாரங்களில் மலக்கழிவுகள் கலப்பதால், அதிலும் மழைக்காலங்களில் இப்படிக் கலப்பதால் அது குடிநீரில் அதிக அளவு கலந்து சீர்கேட்டை ஏற்படுத்துகின்றது. வீட்டு உபயோகத்துக்காகப் பயன்படுத்தப்படும் நவீன குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மற்றும் அமைப்புகள் கிராமங்களுக்கு வருவதற்கு இன்னமும் சில காலங்கள் ஆகும். நீரால் பரவும் நோய்களான டைஃபாய்டு, வயிற்றுப்போக்கு, மஞ்சள்காமாலை, குடற்புழுக்கள் ஆகியவற்றுக்கு முடிவே இல்லை என்பதில் ஆச்சரியப்பட ஏதும் இல்லை. அதிலும் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு என்றுமே பிரச்சனைதான்

செப்டிக் டேங்க் போதுமான பாதுகாப்பு கொண்டதல்ல. ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை கட்டுவது என்பது சிரமமான காரியம்தான். ஆனால் இதில் உள்ளடங்கி உள்ள பிரச்சனைகள் ஏராளம். வழக்கமான செப்டிக் டேங்க் மற்றும் ஊறல் குழியும் எளிமையான செலவு குறைந்த தீர்வுகளாகத் தோன்றுகின்றன. ஆனால் மண்ணுக்குள் மலக் கழிவுகள் கசியும் அபாயம் எப்போதும் இதில் உள்ளது. ஏனெனில் இந்தக் கழிப்பறைகள் பொருத்தமான வடிவமைப்பில் தயாரிக்கப்படவோ அல்லது கட்டப்படவோ இல்லை. மலக்கழிவின் கசிவு ஆண்டு முழுவதும் நடக்கிறது. அது வெளிப்படையாகக் கண்ணுக்குப் புலப்படாது இருப்பதால் அதைப் பரிசீலிக்கவோ, கண்காணிக்கவோ இயலாமல் போகிறது. அதனால் உரியவர்கள் நடவடிக்கை எடுக்க இயலாமலும் போய்விடுகின்றது. இவை பாதுகாப்பானவை என்ற போலியான திருப்தி உணர்வைத் தருகின்றன. ஆனால் இவை பொது சுகாதாரத்திற்குத் தீங்கானவையாக உள்ளன. பயோ டாய்லெட்டின் அறிமுகம் மேற்சொன்ன இத்தகையப் பின்னணியில்தான் சாதகமான அம்சங்களோடு பயோ- டாய்லெட் அறிமுகமாகிறது. செப்டிக் டேங்க் அல்லது ஊறல் குழிக்கு மாற்றாக இந்த டாய்லெட் பயோ-டைஜஸ்டர் டேங்கை பயன்படுத்துகின்றது. நவீன உயிரியல் கொள்கையைப் பயன்படுத்தி மலப்பொருட்கள் புழுங்கச் செய்ய இது உதவுகின்றது.

பயோ-டாய்லெட் - சிறப்பம்சங்கள்
செப்டிக் டேங்க்கில் கழிவுப் பொருட்கள் குழைசேறாகவும் உரமாகவும் பல மாதங்கள் கழித்து மெதுவாக அதுவாகவே மாறும். இந்தக் காலகட்டத்தில் மலக் கசிவு நமது கவனத்துக்கு வராமல் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடுகின்றது. கழிவுப் பொருட்களைத் திறம்படக் கையாளும் தொழில்நுட்பம் கொண்டதாக பயோ-டாய்லெட் உள்ளது. இந்தவகை டாய்லெட் அனெரோபிக் பாக்டீரியா உதவியுடன் செயல்படுகிறது. பெயருக்கு ஏற்றவகையில் இந்த அனொரோபிக் பாக்டீரியா வளிமண்டல ஆக்சிஜன் சுத்தமாக இல்லாத சூழ்நிலையிலும்கூட வளரவும் பல்கிப் பெருகவும் செய்யும். காற்றுப்புகாமல் அடைக்கப்பட்ட குழிக்குள் இந்தப் பாக்டீரியா இவ்வாறே பல்கிப் பெருகுகின்றது. கழிவுகளை இந்தப் பாக்டீரியா புழுங்கச் செய்து நீராகவும் பயோ-கேஸ் ஆகவும் பிரிக்கின்றது. வேறுவிதமாக மேலும் தெளிவாகச் சொல்வதென்றால் பயோ- டாய்லெட் தொழில்நுட்பம் ஆக்கப்பூர்வமான புழுங்குதல் செயல்பாட்டை அடிப்படையாகக் கொண்டுள்ளது. பிற பழைய முறைகள் செயலூக்கம் இல்லாத சிதைவு முறையை அடிப்படையாகக் கொண்டவை.

பயோ-டாய்லெட் வேறு சில சாதகமான அம்சங்களையும் கொண்டுள்ளது. செப்டிக் டேங்கில் அல்லது கசிவுக் குழி ஆக்கிரமித்துக் கொள்ளும் இடத்தில் மூன்றில் ஒரு பாகம் இடம் மட்டுமே இந்த டாய்லெட்டுக்குப் போதும். அதாவது இது இடரீதியாக மிகவும் சிறியது. அதேபோன்று செப்டிக் டேங்க் முறையில் அதனை ஒவ்வொரு சில மாதங்களுக்கு என்ற வகையில் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் காலிசெய்து சுத்தம் செய்தாக வேண்டும். ஆனால் பயோ-டாய்லெட்டுக்கு காலி செய்ய வேண்டும் என்ற தேவை இல்லை. ஏனெனில் கழிவுப்பொருட்களில் சுமார் 90 சதவிகிதத்திற்கும் மேல் தற்சிதைவு, தானாகவே நிகழ்ந்து விடுகின்றது. ஆகையால் இந்த பயோ- டாய்லெட்டானது பராமரிப்பு தேவையில்லாமல் சுமார் 50 ஆண்டுகளுக்குச் செயல்பாட்டில் இருக்கும். ஆனால் செப்டிக் டேங்க்குகளை வருடாவருடம் சீர் செய்ய வேண்டும். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அவற்றை மாற்றியாக வேண்டும்.

தண்ணீர் பற்றாக்குறை
திறந்த வெளியில் மலம் கழிக்கும் பழக்கம் நம் நாட்டில் இப்பொழுதும் நடைமுறையில் இருப்பதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாக இருப்பது தண்ணீர் பற்றாக்குறைதான். ஓரளவிற்கு நன்றாகக் கட்டப்பட்ட டாய்லெட்டுகள்கூட ஒரு சில நாட்களிலேயே பயன்படுத்தப்படாமல் விடப்படுகின்றன. ஏனெனில் அவற்றை உபயோகப்படுத்துவதற்கு போதுமான தண்ணீர் இல்லாததால் மலக்கழிவுகள் டாய்லெட்டை அடைத்துக்கொண்டு அதனைப் பயன்படுத்த முடியாமல் போய்விடுகின்றது. கிராம மக்கள் மற்றும் நகரக் குடிசைப்பகுதி மக்கள் ஒரு கேனில் தண்ணீர் எடுத்துச் செல்கின்றார்கள். இது தன்னைக் கழுவிக் கொள்ளவே போதுமானது. ஃபிளஷ் அவுட் செய்ய அவர்கள் வாளியில் தண்ணீர் எடுத்துச் செல்வதில்லை. அதற்கு ஒரு காரணம் அந்த அளவிற்கு தண்ணீர் கிடைப்பதில்லை. மற்றொரு காரணம் ஒரு வாளித் தண்ணீர் சுமையை பொதுக்கழிப்பறைக்கு சுமந்து செல்வதில் உள்ள சிரமம். இந்த அம்சம் நம்மை பொதுசுகாதாரத்தின் அடுத்த தேவையில் கவனம் செலுத்த வைக்கின்றது. அதுதான் போதுமான தண்ணீர் விநியோகம் என்பதாகும். தண்ணீர் பிரச்சனையைத் தீர்க்காமல் ஒரு சில வாரங்களிலேயெ அடைத்துக்கொள்ளப் போகின்றது என்ற நிலைமையில் கழிப்பறைத் தொகுதிகளை மட்டுமே கட்டிக்கொண்டு செல்வதில் அர்த்தம் ஏதும் இல்லை.

You'r reading புதிய சுகாதார கழிப்பறைக்கான இந்திய அரசாங்க திட்டம்! Originally posted on The Subeditor Tamil

More Special article News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை