தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக அமைச்சர் ஜலீலிடம் என்ஐஏ விசாரணை நடத்தி வருவதைத் தொடர்ந்து அவர் பதவி விலகக் கோரி கேரளா முழுவதும் நடந்து வரும் போராட்டத்தில் கடும் வன்முறை வெடித்தது.திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் மற்றும் அனுமதியின்றி தூதரகம் வழியாக மத நூல்கள் கொண்டு வந்தது தொடர்பாகக் கேரள உயர் கல்வித்துறை அமைச்சர் ஜலீலிடம் கடந்த சில தினங்களுக்கு முன் மத்திய அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் இன்று காலை முதல் அவரிடம் தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது. இதற்காக இன்று காலை 6 மணியளவில் அமைச்சர் ஜலீல் கொச்சியில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் ஆஜரானார். 9 மணிக்குத் தொடங்கிய விசாரணை 5 மணி நேரத்திற்கும் மேலாகத் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஏற்கனவே அமைச்சர் ஜலீல் பதவி விலகக் கோரி கடந்த சில தினங்களாகக் கேரளா முழுவதும் காங்கிரஸ், பாஜக உட்பட எதிர்க்கட்சியினர் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று அமைச்சர் ஜலீலிடம் என்ஐஏ விசாரணை நடத்தி வருவதைத் தொடர்ந்து போராட்டம் மேலும் தீவிரமடைந்தது.
திருவனந்தபுரம், பாலக்காடு, கோட்டயம், கண்ணூர் உள்பட மாநிலம் முழுவதும் எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பல இடங்களில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது. போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன. போராட்டக்காரர்களை போலீசார் தண்ணீரைப் பீய்ச்சியடித்தும், தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் விரட்டினர். தடியடி மற்றும் கல்வீச்சில் காங்கிரஸ் எம்எல்ஏ பல்ராம் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
திருவனந்தபுரம் தலைமைச் செயலகம் முன்பும் எதிர்க்கட்சியினர் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த சம்பவத்தால் கேரளா முழுவதும் இன்று பெரும் பதற்றம் நிலவுகிறது. அமைச்சர் ஜலீல் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என்று கேரள எதிர்க்கட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.