கொரோனாவால் போரடித்து வீடுகளிலேயே முடங்கிக் கிடப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி கொரோனாவுக்கு பயப்படாமல் இந்தியாவில் எங்கெல்லாம் டூர் போகலாம் என்பதை இங்குப் பார்ப்போம்.கொரோனா வந்தாலும் வந்தது, சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பல மாதங்களாக வீடுகளிலேயே முடங்கிக் கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
குறிப்பாகச் சிறுவர்கள் தான் வீடுகளிலேயே முடங்கிக் கிடப்பதால் மனதளவில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களால் பள்ளிக்கும் செல்ல முடியவில்லை, வெளியேவும் சுற்ற முடியவில்லை. இதனால் பெரும்பாலான நேரங்களில் போன், டிவி ஆகியவற்றில் தான் மூழ்கிக் கிடக்கின்றனர். இரண்டு நாள் விடுமுறை கிடைத்தாலே ஊர்சுற்றக் கிளம்பி விடும் பலருக்கு இது போதாத காலமாகவே இருக்கிறது.
இந்நிலையில் இந்தியாவில் 5வது கட்டமாக ஊரடங்கு நிபந்தனைகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து மாநிலம் விட்டு மாநிலம் செல்ல பாஸ் எடுக்கத் தேவையில்லை. பெரும்பாலான சுற்றுலாத் தலங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆனாலும் சில மாநிலங்களுக்குச் செல்லும் போது இப்போதும் கடும் நிபந்தனைகளைப் பின்பற்றியே ஆகவேண்டும் என்ற நிலை உள்ளது. இந்நிலையில் சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக சில மாநிலங்களில் சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. எந்தெந்த மாநிலங்களுக்கு நாம் சிரமம் இல்லாமல் செல்லலாம் என்பதைப் பார்ப்போம்.
கோவா: கோவாவைப் பற்றி யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. சுற்றுலாப் பயணிகளின் வருகைக்காகக் கோவா தற்போது காத்துக்கொண்டிருக்கிறது. இங்கு வருபவர்கள் கொரோனா பரிசோதனை நடத்திய சான்றிதழைக் கொண்டு வர வேண்டிய தேவையில்லை. மேலும் இங்கு வந்த பின்னர் எந்த பரிசோதனையும் நடத்த வேண்டாம். சுய தனிமைக்கும் செல்ல வேண்டிய அவசியமில்லை.
இமாச்சல பிரதேசம்: மலையும், மலை சார்ந்த பகுதிகளையும் அனுபவிக்க விரும்புவார்கள் இங்குச் செல்லலாம். சுற்றுலாப் பயணிகளுக்கு எந்த பரிசோதனையும், தனிமையில் இருக்கவும் தேவையில்லை.
உத்தராகாண்ட்: இங்குச் செல்ல கோவிட் நெகட்டிவ் சர்டிபிகேட் தேவையில்லை. ஆனால் இந்த அரசின் இணையதளத்தில் முன்பதிவு செய்தால் மட்டுமே இங்குச் செல்ல முடியும். முன்பதிவு செய்ய எந்த சிரமமும் இருக்காது. மிக எளிதில் முன்பதிவு செய்து விட்டு இங்குச் செல்லலாம்.
புதுச்சேரி: கோவிட் நெகட்டிவ் சான்றிதழோ சுய தனிமை நடைமுறைகளோ இல்லாமல் சுற்றுலாப் பயணிகள் இங்குச் செல்லலாம். இங்குச் சென்ற பின்னர் யாருக்காவது கொரோனா பாதிப்போ அல்லது நோய் அறிகுறிகளோ இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையில் தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற நிபந்தனை மட்டுமே உள்ளது. எனவே தைரியமாகச் சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரிக்குச் செல்லலாம்.
அருணாச்சல பிரதேசம்: இங்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு ராபிட் ஆன்டிஜன் பரிசோதனை நடத்தப்படும். நோய் அறிகுறி இல்லாத யார் வேண்டுமானாலும் இங்குத் தைரியமாகச் செல்லலாம்.
குஜராத்: இங்குச் செல்பவர்களுக்கு தெர்மல் ஸ்கிரீனிங் மட்டுமே நடத்தப்படும். நோய் அறிகுறி இல்லாதவர்களுக்குத் தனிமையில் செல்ல வேண்டிய அவசியமில்லை.
கர்நாடகா:நோய் அறிகுறி இல்லாத வெளிமாநில பயணிகளுக்கு இங்குத் தனிமையில் இருக்க வேண்டிய அவசியமில்லை.
லடாக்: இங்கு 5 நாட்கள் தங்குகிறீர்கள் என்றால் 96 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழைக் கொடுத்தால் தனிமையில் இருக்க வேண்டிய அவசியமில்லை.எங்குச் சென்றாலும் ஆரோக்கிய சேது செயலியை போனில் பதிவிறக்கம் செய்துவிட்டுச் செல்வது பயனுள்ளதாக இருக்கும். இதை மட்டும் மறக்க வேண்டாம்.