கேரளாவில் எகிறும் கொரானா 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது..!

Covid spread, 144 imposed in kerala

by Nishanth, Oct 3, 2020, 12:04 PM IST

கேரளாவில் கொரோனா தொற்று கட்டுக்கடங்காமல் பரவுவதைத் தொடர்ந்து இன்று முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது.கேரளாவில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா தொற்று பரவுவது அதிகரித்து வருகிறது. தற்போது தமிழ்நாடு, கர்நாடகா ஆந்திரா உட்பட நோய் பரவலில் முன்னிலையில் இருந்த மாநிலங்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையில் கேரளா முதலிடத்தைப் பிடித்துள்ளது.

தினசரி நோயாளிகள் எண்ணிக்கை கடந்த சில தினங்களுக்கு முன் தொடர்ந்து 2 நாட்கள் 8 ஆயிரத்தைத் தாண்டிய நிலையில் நேற்று நோயாளிகள் எண்ணிக்கை 9 ஆயிரத்தைத் தாண்டி விட்டது. தினமும் நோய் பரவலின் வேகம் அதிகரித்து வருவது கேரள அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. பல அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாத நிலை உருவாகியுள்ளது. அவசர சிகிச்சைப் பிரிவிலும் வென்டிலேட்டர்கள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்பட மருத்துவ உபகரணங்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நோய் பரவலைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கேரள அரசு தீர்மானித்தது. இதன்படி இன்று முதல் அக்டோபர் 31ம் தேதி வரை மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கத் தீர்மானிக்கப்பட்டது.இந்த தடை உத்தரவு இன்று காலை 9 மணி அளவில் அமலுக்கு வந்தது. இதன்படி பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடினால் அவர்கள் மீது தொற்று நோய் பரவல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும். திருமணங்களில் 50 பேருக்கு மேல் கலந்துகொள்ளக் கூடாது. இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் 20 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். பஸ் மற்றும் பொது போக்குவரத்துக்கு எந்த தடையும் கிடையாது. கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை வழக்கம்போல் திறக்கலாம். ஆனால் கடைகள், ஓட்டல்களில் ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் உள்ளே செல்ல அனுமதி கிடையாது. முக கவசம் இல்லாமல் பொது இடங்களில் நடமாடினால் அவர்களுக்கு எதிராக அபராதம் உட்படச் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியது: கொரோனா தொற்று எத்தனை காலம் நம்முடன் இருக்கும் எனக் கூற முடியாது. எப்படியும் இன்னும் சிறிது காலம் இந்த நோய் நம்முடன் கண்டிப்பாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தற்போது இந்த நோயைக் கட்டுப்படுத்துவதில் கவனக் குறைவு ஏற்பட்டுள்ளது என்பது உண்மை தான். எனவே இனியும் தாமதிக்காமல் உரிய நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே இந்த நோயின் தாக்குதலில் இருந்து நம்மால் தப்பிக்க முடியும். இதனால் நாம் கடும் நிபந்தனைகளைப் பின்பற்றியே ஆகவேண்டும். பள்ளிகள் திறப்பது குறித்து இப்போதைக்கு எதுவும் கூற முடியாது. அதற்கான நேரம் வரும் போது கல்வி நிலையங்கள் திறக்கப்படும். பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்கா விட்டால் நிலைமை மோசமாகி விடும். இவ்வாறு அவர் கூறினார்.

You'r reading கேரளாவில் எகிறும் கொரானா 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது..! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை