ஹத்ராசில் இளம்பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகளில் ஒருவர் இளம்பெண்ணின் சகோதரனுடன் 100க்கும் மேற்பட்ட முறை போனில் பேசியுள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது.உ பி ஹத்ராசில் இளம்பெண் 4 பேரால் கூட்டுப் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு இன்னும் ஓயவில்லை. நாடு முழுவதும் இந்த சம்பவத்தைக் கண்டித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கொல்லப்பட்ட இளம்பெண்ணின் வீட்டுக்குச் சென்று அவரது உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர். இது தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றம் சுயமாக முன்வந்து ஒரு வழக்குப் பதிவு செய்துள்ளது. குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உபி அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நலன் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த மனுக்கள் நேற்று விசாரணைக்கு வந்தபோது, இந்த சம்பவம் மிகுந்த கொடுமையான, அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் கருத்து தெரிவித்தது. இந்த வழக்கில் சாட்சிகள் அனைவருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. நாடு முழுவதும் ஹத்ராஸ் சம்பவத்தைக் கண்டித்து போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போது இந்த வழக்கில் தற்போது ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளி ஒருவரும், இளம்பெண்ணின் சகோதரனும் பல முறை போனில் தொடர்பு கொண்டு பேசியதாக போலீஸ் தெரிவித்துள்ளது. இளம்பெண்ணின் சகோதரனின் பெயரிலுள்ள செல்போனில் அந்த நபர் கடந்த 5 மாதத்தில் 100க்கும் மேற்பட்ட முறை அழைத்துப் பேசியுள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் முதல் இந்த ஆண்டு மார்ச் வரை இருவரும் 5 மணி நேரத்திற்கும் மேல் பேசியுள்ளனர். இந்த தகவல் ஒரு தேசிய பத்திரிகையில் வெளியாகி உள்ளது.
கைது செய்யப்பட்ட நபருடன் இளம் பெண்ணின் சகோதரன் தானா பேசினார் என்பது குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கி உள்ளனர். இது தொடர்பாக அவரது குரல் மாதிரியைப் பரிசோதிக்கவும் போலீஸ் தீர்மானித்துள்ளது. இது தவிர இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் இளம்பெண்ணின் குடும்பத்தினருடன் அடிக்கடி தொடர்பு கொண்டு வந்ததைப் பார்த்துள்ளதாக அந்த கிராமத்தினரும் கூறுகின்றனர் என்று அந்த பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து ஹத்ராஸ் சம்பவத்தில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.