மதுவிற்காக தந்தையை வெட்டி கொன்ற மகன்...!

Row over liquor, man hacks father to death in kerala

by Nishanth, Oct 16, 2020, 17:06 PM IST

நான் வாங்கி வைத்த மதுவை எப்படி எடுத்துக் குடிக்கலாம் என்று கேட்டு தந்தையை மகன் சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொன்றார். தந்தையும் வெட்டியதில் மகன் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள சேராநெல்லூர் விஷ்ணுபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பரதன் (65). இவரது மகன் உன்னிகிருஷ்ணன் (38). இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். தந்தையும், மகனும் குடி போதைக்கு அடிமையானவர்கள். இருவரும் வீட்டில் ஒன்றாக அமர்ந்து மது அருந்துவது வழக்கம். அப்போது அவர்களிடையே தகராறு ஏற்படுவது உண்டு. ஒருவருக்கொருவர் அடிதடி மோதலிலும் ஏற்படுவார்கள்.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் உன்னிகிருஷ்ணன் ஒரு பாட்டில் மதுவை வாங்கி வீட்டில் தனது அறையில் வைத்திருந்தார். நேற்று இரவு பார்த்த போது மது பாட்டிலைக் காணவில்லை. தந்தையிடம் கேட்டபோது அதை எடுத்துக் குடித்து விட்டதாகக் கூறினார். இது உன்னிகிருஷ்ணனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது இருவரும் நல்ல குடி போதையிலிருந்தனர். போதையில், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து உன்னிகிருஷ்ணன் தந்தையை வெட்டுவதற்குப் பாய்ந்தார். உடனடியாக பரதனும் ஒரு அரிவாளை எடுத்து மகனை வெட்ட முயற்சித்தார்.

சத்தத்தைக் கேட்டு பக்கத்து வீட்டினர் அங்கு விரைந்து சென்றனர். இருவரும் அரிவாளால் வெட்ட முயற்சிப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அப்போது பரதன் திடீரென உன்னிகிருஷ்ணனின் தலையில் வெட்டினார். இதில் ஆத்திரமடைந்த உன்னிகிருஷ்ணன் தந்தையைச் சரமாரியாக வெட்டினார். இதில் இருவருமே ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர். இதுகுறித்து சேராநெல்லூர் போலீசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று இருவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் பரதன் பரிதாபமாக இறந்தார். உன்னிகிருஷ்ணனுக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

More India News

அதிகம் படித்தவை