கேரளாவில் 385 டாக்டர்கள் உள்பட 432 சுகாதாரத் துறை ஊழியர்கள் அதிரடி டிஸ்மிஸ்.

by Nishanth, Oct 18, 2020, 17:36 PM IST

கேரளாவில் பல வருடங்கள் தொடர்ந்து பணிக்கு ஆஜராகாமல் இருந்த 385 டாக்டர்கள் உள்பட சுகாதாரத் துறையை சேர்ந்த 432 பேர் அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.
தற்போதைய காலகட்டத்தில் அரசு வேலை கிடைப்பது என்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது. ஆனால் அரசு வேலை கிடைத்துவிட்டால் அனைவரும் வாங்கும் சம்பளத்திற்கு ஒழுங்காக வேலை பார்க்கிறார்களா என்றால் அது சந்தேகம் தான். எவ்வளவு சம்பளம் கிடைத்தாலும் கிம்பளம் இல்லாமல் யாரும் வேலை பார்ப்பதில்லை. பெரும்பாலான அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் நடைபெறாது என்ற நிலை தற்போது உள்ளது. சமீபத்தில் தமிழ்நாட்டில் ஒரு பகுதியில் லஞ்சம் வாங்குவதற்கு என்றே அரசு ஊழியர்கள் ஒரு அலுவலகத்தை திறந்த சம்பவமும் நடந்தது.

இது ஒருபுறம் இருக்க, இன்னொரு புறம் அரசுப் பணியில் சேர்ந்தவுடன் சிலர் நீண்ட கால விடுப்பு எடுத்து வெளிநாடுகளிலோ அல்லது தனியார் நிறுவனங்களிலோ பணிபுரிந்து வருகின்றனர். அரசு சம்பளத்தை விட இங்கு மிக அதிகமாக சம்பளம் கிடைக்கும் என்பது தான் இதற்குக் காரணமாகும். நீண்ட கால விடுமுறை முடிந்து கை நிறைய பணமும் பார்த்த பின்னர் மீண்டும் அரசு வேலையில் சேர்ந்து விடலாம். இப்படி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் பறிக்கும் ஆட்களும் உண்டு. இப்படித் தான் கேரளாவில் டாக்டர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்கள் ஏராளமானோர் பணியில் சேர்ந்த பின்னர் நீண்ட கால விடுப்பு எடுத்து வெளிநாடுகளுக்கும், மற்ற தனியார் மருத்துவமனைகளுக்கும் சென்று நல்ல சம்பளத்தில் வேலை பார்த்து வந்தனர். தற்போது கொரோனா காலம் என்பதால் கேரள அரசு சுகாதாரத் துறையில் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் ஊழியர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து இவ்வாறு நீண்ட கால விடுப்பில் இருப்பவர்களை உடனடியாக பணிக்கு திரும்பவேண்டும் என்று அரசு கேட்டுக் கொண்டது. இது தொடர்பாக பலமுறை அவர்களுக்கு நோட்டீசும் அனுப்பப்பட்டது.

ஆனால் யாரும் அதை கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து இவ்வாறு நீண்ட கால விடுப்பில் இருப்பவர்களை பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்ய கேரள அரசு தீர்மானித்து. இதன்படி 385 டாக்டர்கள் உள்பட 432 சுகாதாரத் துறை ஊழியர்கள் அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். இதுகுறித்து கேரள சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா கூறுகையில், தற்போதைய காலகட்டத்தில் ஆயிரக்கணக்கான சுகாதாரத் துறை ஊழியர்கள் இரவு, பகல் பாராமல் தொடர்ந்து பணிபுரிந்து வருகின்றனர். இந்த மோசமான சூழ்நிலையில் எந்த தகுந்த காரணமும் இன்றி சிலர் பணிக்கு வராமல் இருக்கின்றனர். அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்பதால் அவர்கள் அனைவரையும் டிஸ்மிஸ் செய்ய தீர்மானித்தோம் என்று கூறினார்.

Get your business listed on our directory >>


READ MORE ABOUT :

More India News