குடியுரிமைத் திருத்தச் சட்டம் விரைவில் அமல்.. ஜே.பி.நட்டா உறுதி..

CAA delayed by Covid, implementation soon said J.P.Nadda.

by எஸ். எம். கணபதி, Oct 20, 2020, 09:17 AM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு வருகிறது. விரைவில் சட்டம் அமலுக்கு வரும் என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் ஏப்ரல்-மே மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் கட்சியை வீழ்த்தி, ஆட்சியைப் பிடிக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று(அக்.19) மேற்கு வங்கத்தின் சிலிகுரிக்கு சென்றார். அங்குக் கட்சியின் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசித்தார். இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களையும் சந்தித்துப் பேசினார்.அப்போது அவர் பேசுகையில், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டுமென்று பிரதமர் மோடி அரசு செயல்பட்டு வருகிறது.

ஆனால், மம்தா பானர்ஜியின் அரசு, பிரித்தாளும் சூழ்ச்சியுடன் ஆட்சியை நடத்தி வருகிறது. மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்குப் போய்ச் சேர விடாமல் தடுக்கிறது. குடியுரிமை திருத்தச் சட்டம்(சிஏஏ) கொண்டு வரப்பட்ட பின்பு, கொரோனா வந்து விட்டதால் அதை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது அந்தச் சட்டத்தின் விதிமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் அந்த சட்டம் அமல்படுத்தப்படும். அதன் பலன்கள் உங்களுக்குக் கிடைக்கும் என்று குறிப்பிட்டார்.

கடந்த 2014ம் ஆண்டுக்கு முன்பு, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சமூகத்தினருக்குக் குடியுரிமை வழங்கும் வகையில் புதிய குடியுரிமை சட்டத்திருத்தம்(சிஏஏ) கொண்டு வரப்பட்டுள்ளது.இந்துக்கள், சீக்கியர்கள், பார்சி, பெளத்தர்கள், சமணர்கள், கிறிஸ்தவர்களுக்குக் குடியுரிமை வழங்கும் அதே நேரத்தில், முஸ்லிம்களுக்கு மட்டும் குடியுரிமை மறுப்பது சிறுபான்மையினருக்கு எதிரானது என்று எதிர்க்கட்சிகளும், சிறுபான்மையினரும் இந்த சட்டத்தை எதிர்த்துப் பல மாதங்கள் போராடியது குறிப்பிடத்தக்கது.

You'r reading குடியுரிமைத் திருத்தச் சட்டம் விரைவில் அமல்.. ஜே.பி.நட்டா உறுதி.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை