சபரிமலையில் மண்டலக் கால பூஜைகளின் போது தினசரி தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.லாக்டவுன் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த மார்ச் முதல் 7 மாதங்களாகப் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில் கடந்த வாரம் ஐப்பசி மாத பூஜைகளில் பக்தர்களுக்குத் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. கடந்த 17ம் தேதி முதல் நேற்று வரை 5 நாட்கள் தினமும் 250 பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. முன்பதிவு செய்யும்போது 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனோ பரிசோதனை நடத்திய சான்றிதழை இணைக்க வேண்டும். மேலும் சபரிமலை சென்ற பின்னரும் பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில் பிரசித்திபெற்ற மண்டல கால பூஜைகளுக்காகச் சபரிமலை கோவில் நடை நவம்பர் 15ம் தேதி திறக்கப்படுகிறது. மறுநாள் 16ம் தேதி முதல் டிசம்பர் 27ம் தேதி வரை மண்டலக் கால பூஜைகள் நடைபெறுகின்றன. இதையொட்டி தினமும் 1000 பக்தர்களும், சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் 2000 பக்தர்களையும் அனுமதிக்கத் தீர்மானிக்கப்பட்டது. கடந்த சில வாரங்களுக்கு முன் கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில் சபரிமலையில் மண்டலக் காலத்தில் மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த ஒரு அறிக்கை கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையைப் பரிசீலித்த நீதிமன்றம் சில மாற்றங்களை ஏற்படுத்தக் கேரள அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு: மண்டலக் கால பூஜைகளுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்னதானத்திற்குக் குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் அது ஏற்கத்தக்கதல்ல. சபரிமலைக்கு வெகு தொலைவில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். எனவே தரிசனத்திற்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல நிலக்கல் பகுதியிலிருந்து பம்பைக்குப் பக்தர்களின் சிறிய வாகனங்களை அனுமதிக்கலாம். பக்தர்களைப் பம்பையில் இறக்கிய பின்னர் அந்த வாகனத்தை நிலக்கல்லுக்கு திருப்பி அனுப்பிவிட வேண்டும். இதே போல நிலக்கல்லில் பக்தர்கள் ஓய்வெடுக்கவும் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.