தனக்கு எதிராக பேஸ்புக்கில் சர்ச்சையான கருத்துக்களைத் தெரிவித்த கேரளாவைச் சேர்ந்த வாலிபரைத் துபாயிலிருந்து அமைச்சர் நாடு கடத்த முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் விவகாரம் தொடர்பான சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் ஜலீல் தான் இந்த குற்றச்சாட்டுக்கும் ஆளாகியுள்ளார்.
திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் நாளுக்கு நாள் ஏதாவது பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த கடத்தல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னாவுக்கு கேரள அரசில் முதல்வர் அலுவலகத்தில் தொடங்கி, அமைச்சர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்படப் பல முக்கிய பிரமுகர்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இவர் தங்கக் கடத்தல் மட்டுமில்லாமல் வெளிநாட்டுக்கு டாலர்கள் கடத்தியது உட்படப் பல சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ, சுங்க இலாகா மற்றும் மத்திய அமலாக்கத் துறை ஆகிய 3 மத்திய விசாரணை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பலமுறை காவலில் எடுத்தும், சிறையில் வைத்தும் ஸ்வப்னாவிடம் விசாரணை நடத்தினர்.இந்த விசாரணைகளில் ஸ்வப்னா தலைமையிலான கும்பல் கடந்த 4 வருடங்களுக்கு மேலாக நடத்தி வந்த பல சட்டவிரோத செயல்களும் வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் சுங்க இலாகாவினர் நடத்திய விசாரணையில் கேரள உயர் கல்வித்துறை அமைச்சர் ஜலீல் குறித்து ஸ்வப்னா ஒரு திடுக்கிடும் தகவலைக் கூறினார். அதாவது, கேரளாவைச் சேர்ந்த ஒரு வாலிபரைத் துபாயில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்திக் கொண்டு வருவதற்காக தன்னிடம் அமைச்சர் ஜலீல் பலமுறை வற்புறுத்தினார் என்றும், இதையடுத்து நான் அமீரக துணைத் தூதரிடம் அமைச்சரை அழைத்துச் சென்று விவரத்தைக் கூறினேன் என்று சுங்க இலாகாவினரிடம் தெரிவித்துள்ளார்.
ஒரு நாட்டிலிருந்து ஒருவரை நாடு கடத்துவது என்பது ஒரு மாநில அமைச்சரின் கட்டுப்பாட்டிலோ, துணைத் தூதரின் கட்டுப்பாட்டிலோ வரும் விஷயமல்ல. இது இரண்டு நாடுகளுக்கிடையே உயர்மட்டத்தில் ஆலோசித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கையாகும். ஒரு மாநில அமைச்சர் நினைத்தால் தன்னுடைய சொந்த விருப்பத்திற்காக யாரையும் நாடு கடத்த முடியாது. இந்நிலையில் கேரள அமைச்சர் ஜலீல், இந்தியாவைச் சேர்ந்த ஒருவரைத் துபாயிலிருந்து நாடு கடத்த முயற்சித்த சம்பவம் சட்ட விரோத செயலாகக் கருதப்படுகிறது. இந்த விவகாரம் கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் அமைச்சர் ஜலீல் துபாயிலிருந்து நாடு கடத்த முயற்சித்த வாலிபர் குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த யாசர் அரபாத் என்ற வாலிபரைத் தான் அமைச்சர் ஜலீல், துபாயில் இருந்து நாடு கடத்த திட்டமிட்டிருந்தார். முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த இவர் துபாயில் பணிபுரிந்து வருகிறார். அமைச்சர் ஜலீலுக்கு எதிராக இவர் பலமுறை பேஸ்புக்கில் சில சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் ஜலீல் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து யாசர் அராபத் மீது போலீசார் 2 வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். மேலும் மத மோதலை தூண்டியதாக ஒரு வழக்கும் இவர் மீது பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதுகுறித்து துபாயில் உள்ள யாசர் அராபத் கூறுகையில், அமைச்சர் ஜலீலுக்கு எதிராக நான் சில கருத்துக்களை பேஸ்புக்கில் பதிவிட்டிருந்து உண்மை தான். ஆனால் அதற்காக என்னை தேசவிரோதியாக சித்தரிக்க முயற்சிக்கின்றனர். நான் எந்த சட்டவிரோத செயலிலும் ஈடுபடவில்லை என்று கூறினார். இந்த விவகாரம் கேரளாவில் தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசும் விசாரணை நடத்தி வருகிறது.