தங்கக் கடத்தல் வழக்கு ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் கைது கேரள அரசியலில் பரபரப்பு

by Nishanth, Oct 28, 2020, 11:33 AM IST

தங்கக் கடத்தல் வழக்கில் கேரள மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரின் முன்ஜாமீன் மனு இன்று கேரள உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து திருவனந்தபுரத்தில் ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை மத்திய அமலாக்கத் துறை அதிரடியாகக் கைது செய்தது.

திருவனந்தபுரத்தில் ஐக்கிய அமீரக தூதரக பார்சல் மூலம் தங்கம் கடத்தப்பட்ட வழக்கு இன்று மிக முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னாவுக்கும், கேரள அரசில் முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரியான சிவசங்கருக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து கடந்த 4 மாதங்களுக்கு முன் சிவசங்கர் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து சிவசங்கரிடம் தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ, மத்திய அமலாக்கத் துறை மற்றும் சுங்க இலாகா அதிகாரிகள் பலமுறை விசாரணை நடத்தினர். இதுவரை அவரிடம் 100 மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடந்தது. ஆனால் விசாரணைக்கு சிவசங்கர் முழுமையாக ஒத்துழைக்க வில்லை.இதன் காரணமாகத் தங்கக் கடத்தலில் சிவசங்கருக்கு எதிரான ஆதாரங்கள் இருந்தும் அவரை கைது செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

இதற்கிடையே தங்கக் கடத்தலில் சுங்க இலாகா மற்றும் மத்திய அமலாக்கத் துறையின் வழக்கிலிருந்து முன்ஜாமீன் கோரி சிவசங்கர் கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, சிவசங்கர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார். அவருக்குத் தங்க கடத்தலில் முக்கிய தொடர்பு இருக்கிறது. அவருக்கு முன் ஜாமீன் வழங்கினால் சாட்சிகளைக் கலைக்க வாய்ப்பு உள்ளது. அவரை கஸ்டடியில் எடுத்து விசாரித்தால் மட்டுமே உண்மை விவரங்கள் வெளியே வரும். எனவே சிவசங்கரின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மத்திய அமலாக்கத் துறை மற்றும் சுங்க இலாகா வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

ஆனால் தங்கக் கடத்தலில் சிவசங்கருக்கு எந்த தொடர்பும் இல்லை. விசாரணைக்கு முழுமையாக அவர் ஒத்துழைத்தார். அரசியல் காரணங்களுக்காகவே சிவசங்கரை கொடுமைப்படுத்துகின்றனர். எனவே அவருக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று சிவசங்கர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், முன்ஜாமீன் தொடர்பான வழக்கில் இன்று உத்தரவு பிறப்பிப்பதாகத் தெரிவித்திருந்தது.இந்நிலையில் இன்று சிவசங்கரின் முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதற்கிடையே சிவசங்கர் திருவனந்தபுரத்தில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து மத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள் திருவனந்தபுரத்தில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனைக்குச் சென்று அவரை கைது செய்து கொச்சிக்குக் கொண்டு சென்றனர். கேரள அரசின் மூத்த ஐஏஎஸ் அதிகாரியும், அரசில் மிக முக்கிய பொறுப்பில் இருந்தவருமான சிவசங்கர் கைது செய்யப்பட்டது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது கேரளாவில் ஆளும் இடதுசாரி கூட்டணி அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த வருடம் கேரளாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சிவசங்கரின் கைது கேரள அரசுக்குக் கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

More India News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அதிகம் படித்தவை