ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய (27-10-2020) போட்டியில் சன் ரைசஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் துபாயில் மோதின. இந்த போட்டியில் வென்றே தீர வேண்டிய நெருக்கடியில் ஹைதராபாத் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது டாஸ் வென்ற டெல்லி அணி.
ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரரான பேர்ஸ்ட்டோ காயம் காரணமாக நேற்றைய போட்டியில் விளையாடவில்லை இதனால் மாற்று வீரராக சஹா களமிறக்கப்பட்டார். இந்த சீசனில் இவருக்குக் கிடைத்த இரண்டாவது வாய்ப்பு இதுவாகும். எனவே நேற்றைய போட்டியில் ஹைதராபாத் அணி சார்பாக வார்னர் மற்றும் சஹா இருவரும் களம் கண்டனர். தனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திய சஹா தொடக்கம் முதலே அதிரடியாக ஆடி டெல்லி பந்து வீச்சாளர்களை அலறவிட்டார்.
மறுபுறம் ஆடிக்கொண்டிருந்த வார்னர் தன் பங்கிற்கு அதிரடியைத் தொடங்க, இவர்களின் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் விழி பிதுங்கினர் டெல்லி பவுலர்கள். டெல்லி அணியின் நம்பக பந்து வீச்சாளரான ரபாடா ஓவரை தெறிக்கவிட்டார் வார்னர்.
இவர்கள் இருவரும் சேர்ந்து தொடக்க இணையாக 9.4 ஓவரில் 107 ரன்களை சேர்த்துப் பிரமிக்க வைத்தது. வார்னர் 34 பந்தில் 8 பவுண்டரி, 2 சிக்சர் என 66 ரன்களை விளாசி அஷ்வின் வீசிய பந்தில் அவுட்டானார்.
மறுபுறம் டெல்லி பந்து வீச்சாளர்களை மிரட்டிக் கொண்டிருந்த சஹா தனது அதிரடியைத் தொடர்ந்தார். இவருடன் கைகோர்த்த மனிஷ் பாண்டே நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். ஒரு கட்டத்தில் 250 ஓட்டங்களைக் கடந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 45 பந்தில் 12 பவுண்டரி, 2 சிக்சர் விளாசி 87 ரன்களை தெறிக்கவிட்ட சஹா நோர்ட்ஜா ஓவரில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.
ஹைதராபாத் அணி இருபது ஓவர் முடிவில் 219/2 ரன்களை விளாசிப் பிரமிக்க வைத்தது. டெல்லி அணி இருபது ஓவர் முடிவில் 220 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது.டெல்லி அணி சார்பில் ப்ரித்வி ஷா க்கு பதில் ரகானே, தவான் உடன் தொடக்க இணையாகக் களமிறங்கினார். ஹைதராபாத் அணி சார்பாக முதல் ஓவரை வீசிய சந்தீப் ஷர்மா டெல்லி அணிக்கு தவான் விக்கெட்டை வீழ்த்தி அதிர்ச்சியளித்தார். பின்னர் வழக்கம்போல் டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஸ்டேய்னஸ் களமிறக்கப்பட்டார்.
இரண்டாவது ஓவரை வீசிய நதீம் 5 ரன்களை எடுத்திருந்த ஸ்டேய்னஸ் விக்கெட்டை வீழ்த்தி டெல்லி அணியை நெருக்கடிக்கு உள்ளாக்கினர். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்து கொண்டே இருக்க ரகானேவும், ஃபண்ட்டும் கைகோர்த்து நிதானமாகத் தனது ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
ஆனால் இவர்களும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை ரகானே( 26) மற்றும் ஃபண்ட் (36) ரன்களில் வெளியேற டெல்லி அணியின் தோல்வி தீர்மானமானது.பின்னர் களமிறங்கிய அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டாக டெல்லி அணி 131 ரன்களில் சுருண்டது. ஹைதராபாத் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் , 5 வது வெற்றியைப் பதிவு செய்தது. அதிரடியாக விளையாடிய சஹா ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.