பெங்களூரு போதைப் பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட கேரள மாநில சிபிஎம் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன் பினீஷின் திருவனந்தபுரத்திலுள்ள வீட்டில் சோதனை நடத்திய மத்திய அமலாக்கத் துறையினர் பினீஷின் மனைவி மற்றும் 2 வயதுக் குழந்தையை 24 மணி நேரத்திற்கு மேல் வீட்டில் சிறை வைத்ததாகப் பரபரப்பு புகார் எழுந்துள்ளது. இதையடுத்து பினீஷின் உறவினர்கள் வீட்டின் முன் போராட்டம் நடத்தினர்.
பெங்களூருவில் கைது செய்யப்பட்ட போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்குப் பண உதவி செய்ததாகக் கூறப்பட்ட புகாரில் கேரள மாநில சிபிஎம் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன் பினீஷ் கடந்த வாரம் வாரம் பெங்களூரு மத்திய அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார். தற்போது இவர் அமலாக்கத் துறையின் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார். இந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
கடந்த 7 வருடங்களில் இவரது 2 வங்கிக் கணக்குகளில் 5 கோடிக்குமேல் பணம் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவை அனைத்துமே கருப்புப் பணம் எனத் தெரியவந்துள்ளது. போதைப் பொருள் கடத்தல் மூலமாகக் கிடைத்த பணம் தான் இவரது வங்கிக் கணக்குகளுக்கு வந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பினீஷுக்கு வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துக்கள் இருந்ததும் தெரியவந்தது. போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கு இவர் பெருமளவு பெருமளவு பண உதவி செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இது தவிரக் கேரளாவில் பலருடன் சேர்ந்து ரெஸ்டாரண்ட், நிதி நிறுவனம் உட்பட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் கணக்கில் காட்டப்படாத ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்ததும் தெரியவந்தது. மேலும் முறையாக இவர் வருமான வரியும் கட்டவில்லை. இந்நிலையில் நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள பினீஷின் வீடு மற்றும் அவர் முதலீடு செய்துள்ள நிறுவனங்களில் ஒரே சமயத்தில் பெங்களூரு மத்திய அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
நேற்று காலை திருவனந்தபுரத்தில் உள்ள பினீஷின் வீட்டில் பரிசோதனை தொடங்கியது. 9 மணிக்கு அதிகாரிகள் சென்றபோது அவரது வீடு பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து சிறிது நேரம் கழித்து பினீஷின் மனைவி சாவியுடன் அங்குச் சென்றார். அவருடன் அவரது 2 வயதுக் குழந்தையும், அவரது தாயும் இருந்தனர். இதன் பின்னர் 10 மணியளவில் பரிசோதனை தொடங்கியது.
இந்த பரிசோதனை இரவு 10 மணி வரை நீடித்தது. இதில் பெங்களூருவில் கைது செய்யப்பட்ட முகம்மது அனூப் என்பவர் பயன்படுத்திய ஒரு கிரெடிட் கார்டு கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான ஆவணத்தில் கையெழுத்திடுமாறு பினீஷின் மனைவியிடம் அதிகாரிகள் கூறினர். ஆனால் அது தங்களது வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டது அல்ல என்றும், அமலாக்கத் துறை அதிகாரிகள் வரும்போது கொண்டு வந்து அங்கு வைத்தது என்றும் கூறியவர் கையெழுத்திட மறுத்தார். ஆனால் கையெழுத்துப் போடாமல் வீட்டை விட்டு வெளியே செல்ல மாட்டோம் என்று அதிகாரிகள் கூறினர். இதனால் நேற்று இரவு அதிகாரிகள் திரும்பிச் செல்லவில்லை. விடியவிடிய வீட்டிலேயே அதிகாரிகள் தங்கியிருந்தனர்.காலை ஆன பிறகும் அதிகாரிகள் அங்கிருந்து செல்ல வில்லை. கையெழுத்துப் போடுவதில்லை என்பதில் பினீஷின் மனைவியும் உறுதியாக இருந்தார்.
இந்நிலையில் இன்று காலை பினீஷின் உறவினர்கள் வீட்டுக்கு வந்து உள்ளே சென்று பினீஷின் மனைவி மற்றும் குழந்தையைச் சந்திக்க வேண்டும் என்று கூறினர். ஆனால் அதிகாரிகள் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. இதையடுத்து பெண்கள் உள்பட பினீஷின் உறவினர்கள் வீட்டுக்கு முன் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீஸ், மனித உரிமை ஆணையம் மற்றும் குழந்தைகள் நல ஆணையத்திலும் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து குழந்தைகள் நல ஆணையத் தலைவர் அங்கு விரைந்து சென்றார். குழந்தையை உடனடியாக பார்க்க வேண்டும் என்று அவர்கள் கூறி ஒரு நோட்டீஸ் கொடுத்தனர்.
பின்னர் சிறிது நேரம் கழித்து பினீஷின் மனைவி குழந்தையுடன் வெளியே வந்தார். அப்போது அமலாக்கத் துறை அதிகாரிகள் தன்னையும் குழந்தையையும் மன ரீதியாகத் துன்புறுத்தினர் என்றும், கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்க முயற்சித்தனர் என்றும் கூறினார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்திற்கு பின்னர் மத்திய அமலாக்கத் துறையினர் விசாரணையை முடித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இந்த சம்பவத்தால் இன்று திருவனந்தபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.