நகைக் கடையில் பங்குதாரர்களை சேர்த்து பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் ₹ 200 கோடிக்கு மேல் மோசடி செய்ததாகக் கூறப்பட்ட புகாரில் கேரளாவைச் சேர்ந்த முஸ்லீம் லீக் எம்எல்ஏ கமருதீன் கைது செய்யப்பட்டுள்ளார்.கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள மஞ்சேஸ்வரம் தொகுதி முஸ்லிம் லீக் எம்எல்ஏவாக இருப்பவர் கமருதீன். கடந்த சில வருடங்களுக்கு முன் இவர் அப்பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் லீக் பிரமுகர்களுடன் சேர்ந்து பேஷன் கோல்ட் என்ற பெயரில் நகைக் கடைகளைத் தொடங்கினார். கண்ணூர் மற்றும் காசர்கோட்டில் மொத்தம் 6 நகைக் கடைகள் திறக்கப்பட்டன.
இந்த கடைகளுக்குப் பங்குதாரர்களாகச் சேர்ப்பதாகக் கூறி பலரிடமிருந்து பணம் வாங்கப்பட்டது. சுமார் 800 பேருக்கு மேல் லட்சக்கணக்கில் இதில் முதலீடு செய்தனர். ஒரு வருடத்தில் அனைவருக்கும் பங்குத் தொகை திருப்பி கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் முதலீடு செய்தவர்களுக்கு ஒரு ரூபாய் கூட பணம் திருப்பிக் கொடுக்கப்படவில்லை. இதையடுத்து பண முதலீடு செய்தவர்கள் போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே இந்த வழக்கு குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது. இதன் பின்னர் நடந்த விசாரணையில் எம்எல்ஏ கமருதீன் தான் இந்த மோசடியில் முக்கிய பங்கு வகித்தார் எனத் தெரியவந்தது. மேலும் 200 கோடிக்கு மேல் மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மோசடி செய்த பணத்தில் கமருதீன், எம்எல்ஏ பெங்களூரு உள்படப் பல பகுதிகளில் பெருமளவு நிலத்தை வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து இன்று போலீசார் அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறினர். பல மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணைக்குப் பின் கமருதீன் எம்எல்ஏவை போலீசார் கைது செய்தனர். முஸ்லிம் லீக் எம்எல்ஏ நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த மோசடி விவகாரம் தேர்தலில் எதிரொலிக்கும் எனக் கருதப்படுகிறது. முஸ்லிம் லீக் கட்சி அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு இந்த விவகாரம் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும், தங்கக் கடத்தல் வழக்கில் இருந்து திசை திருப்புவதற்காகவே இந்த கைது நாடகம் என்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் தெரிவித்துள்ளனர்.