13 வயது மகளை பலாத்காரம் செய்த தந்தை 10ம் வகுப்பு மாணவன் மீது வீண்பழி

by Nishanth, Nov 12, 2020, 17:24 PM IST

13 வயது மகளைப் பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய கொடூர தந்தை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தான் சிக்காமல் இருப்பதற்காக 10ம் வகுப்பு படிக்கும் உறவினரின் மகன் மீது வீண் பழி சுமத்தியதைப் பின்னர் போலீசார் கண்டுபிடித்தனர். கேரள மாநிலம் கண்ணூரில் இந்த சம்பவம் நடந்தது.கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தளிப்பறம்பு அருகே உள்ளது கருமாத்தூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மனைவியும், 13 வயதில் ஒரு மகளும் உண்டு. இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். அந்த சிறுமியின் தந்தை துபாயில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இவர் ஊருக்கு வந்திருந்தார். பின்னர் விடுமுறை முடிந்து கடந்த மாதம் இவர் துபாய் சென்றார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அந்த சிறுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரது தாய் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அங்குப் பரிசோதித்த போது அந்த சிறுமி 6 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. அதைக்கேட்டு அந்த சிறுமியின் தாய் கடும் அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக விசாரித்த போது அப்பகுதியில் வசிக்கும் உறவினர் ஒருவரின் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் தான் தன்னை பலமுறை பலாத்காரம் செய்ததாக அந்த சிறுமி கூறினார். இதுகுறித்து தளிப்பறம்பு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அந்த சிறுவனிடம் விசாரித்தபோது அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை எனத் தெரியவந்தது. அந்த சிறுமி கூறுவதிலும் போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து பெண் போலீசார் உதவியுடன் நடத்திய விசாரணையில் அந்த சிறுமியைப் பலாத்காரம் செய்தது அவரது தந்தை எனத் தெரியவந்தது. வீட்டில் தனது மனைவி இல்லாத நேரத்தில் மகளை மிரட்டி பலமுறை அவர் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக வெளியே தெரிய வந்தால் உறவினரின் மகனின் பெயரைக் கூற வேண்டும் என்று தனது மகளை அவர் மிரட்டி உள்ளார். இதனால் தான் அந்த சிறுமி தந்தைக்குப் பயந்து அந்த சிறுவனின் பெயரைக் கூறியுள்ளார் என விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சிறுமியின் தந்தை மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை துபாயில் இருந்து கேரளா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

More India News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை