திருமணம் நடந்தால் பிரிய வேண்டுமே.. உயிர்த் தோழிகள் ஆற்றில் குதித்து தற்கொலை

by Nishanth, Nov 17, 2020, 13:23 PM IST

உயிருக்கு உயிராக பழகி வந்த தோழிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் திருமணத்திற்கு பின்னர் இருவரும் பிரிய வேண்டி வருமே என்ற மனவேதனையில் பாசக்கார தோழிகள் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் அருகே இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள ஆயூர் பகுதியை சேர்ந்தவர் அசோகன். இவரது மகள் ஆர்யா (21). அருகிலுள்ள இடயம் என்ற பகுதியை சேர்ந்தவர் சிவதாஸ். இவரது மகள் அமிர்தா (21). மிக நெருங்கிய தோழிகளான இவர்கள் கொல்லத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இளங்கலை படித்து முடித்துள்ளனர். இந்த வருடம் தான் இவர்களது இறுதியாண்டு தேர்வு முடிந்தது. இருவரும் நல்ல மதிப்பெண்களுடன் பாஸ் ஆனார்கள். கல்லூரியில் வைத்துத் தான் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. குறுகிய நாட்களிலேயே இருவரும் மிக நெருங்கிய தோழிகள் ஆனார்கள். எங்கு சென்றாலும் இருவரும் சேர்ந்து செல்வது தான் வழக்கம்.

அமிர்தாவின் வீட்டில் ஆர்யாவும், ஆர்யாவின் வீட்டில் அமிர்தாவும் தங்குவது உண்டு.
ஆர்யாவின் தந்தை அசோகன் துபாயில் பணிபுரிகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் இவர் ஊருக்கு வந்திருந்தார். அப்போது அவர் வீட்டில் சுய தனிமையில் இருந்ததால் ஆர்யா தனது தோழி அமிர்தாவின் வீட்டில்தான் 14 நாட்கள் தங்கியிருந்தார். இந்நிலையில் ஆர்யாவுக்கு திருமணம் நடத்த அவரது பெற்றோர் தீர்மானித்தனர். அவருக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலமும் நடந்து வந்தது. இதை அறிந்த இருவரும் வேதனை அடைந்தனர். திருமணம் நடந்தால் இருவரும் பிரிய வேண்டி வருமே என்று இருவரும் கலக்கமடைந்தனர்.இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் இருவரும் கல்லூரிக்கு சென்று சான்றிதழ் வாங்கி வருவதாக கூறிவிட்டு தங்களது வீடுகளில் இருந்து புறப்பட்டு சென்றனர். இருவரது வீடுகளுக்கும் மிக அருகில்தான் கல்லூரி உள்ளது. ஆனால் மாலை வரையிலும் இருவரும் வீடு திரும்பாததால் கலக்கமடைந்த அவர்களது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று கோட்டயம் அருகே வைக்கத்தில் உள்ள வேம்பநாடு ஏரியில் இரண்டு இளம் பெண்கள் உடல்கள் மிதப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரித்த போது இறந்து கிடந்தது ஆர்யாவும் அமிர்தாவும் என தெரியவந்தது. இவர்கள் இருவரும் வைக்கத்திலுள்ள சாலக்குடி ஆற்றில் குதித்துள்ளனர். தற்போது ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் தண்ணீரில் மூழ்கி இறந்த இவர்களது உடல்கள் அடித்துச் செல்லப்பட்டு ஏரிக்கு வந்தது. போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணம் நடந்தால் பிரிய வேண்டி வருமே என்ற வேதனையில் இருவரும் ஆற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

More India News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை