கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை டெல்லியில் முகக் கவசம் அணியாவிட்டால் ₹ 2,000 அபராதம்

by Nishanth, Nov 19, 2020, 17:18 PM IST

டெல்லியில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை மீண்டும் வேகமாக அதிகரித்து வருகிறது. இதையடுத்து நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த டெல்லி அரசு தீர்மானித்துள்ளது. இதன்படி முகக் கவசம் அணியாதவர்களுக்கு 2,000 ரூபாய் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை மெல்ல மெல்லக் குறைந்து வருகிறது.

கடந்த சில நாட்களாகத் தினசரி நோயாளிகள் எண்ணிக்கை 40 ஆயிரத்தை விடக் குறைந்தது. ஆனால் இன்று காலை வரை 24 மணி நேரத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 45,576 ஆக இருந்தது. 585 பேர் கடந்த 24 மணி நேரத்தில் மரணமடைந்தனர். இதையடுத்து இதுவரை மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,31,578 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை நோய் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 90 லட்சத்தை நெருங்கி விட்டது.

தற்போது இந்தியா முழுவதும் 4,40,00க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 83 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். கொரோனாவின் தொடக்கக் கட்டத்தில் டெல்லியில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகளவில் இருந்தது. ஆனால் பின்னர் படிப்படியாகக் குறைந்து வந்தது.இந்நிலையில் கடந்த சில தினங்களாக நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாகத் தீபாவளிக்குப் பின்னர் நோய் பரவல் மிகவும் அதிகரித்துள்ளது. நேற்று நோயாளிகள் எண்ணிக்கை 8 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது போல மரண எண்ணிக்கையும் டெல்லியில் அதிகரித்து வருகிறது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு டெல்லி உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தாதது தான் நோய் பரவலுக்கு முக்கிய காரணம் என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த டெல்லி அரசு தீர்மானித்துள்ளது. மத்திய அரசும், டெல்லி அரசுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. அனைத்து மருத்துவமனைகளிலும் படுக்கைகள் உள்பட வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே முகக் கவசம் அணியாதவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க டெல்லி அரசு தீர்மானித்துள்ளது. ஏற்கனவே முகக் கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது அபராதத் தொகை 2000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

More India News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை