நாற்காலியில் கட்டிப்போட்டு சாப்ட்வேர் இன்ஜினியர் உயிருடன் எரித்துக் கொலை மனைவி, உறவினர்கள் கைது

by Nishanth, Nov 25, 2020, 16:24 PM IST

மந்திரவாதம் நடத்தியதாகச் சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சாப்ட்வேர் இன்ஜினியரை நாற்காலியில் கட்டிப்போட்டு உயிருடன் எரித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக சாப்ட்வேர் இன்ஜினியரின் மனைவி மற்றும் 6 உறவினர்கள் கைது செய்யப்பட்டனர்.தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள ஆல்வால் பகுதியைச் சேர்ந்தவர் ராச்சர்லா பவன்குமார் (40). இவரது மனைவி கிருஷ்ணவேணி.

சாப்ட்வேர் இன்ஜினியரான பவன் குமார், பெங்களூருவில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். பவன் குமார் தன்னுடைய வீட்டில் வைத்து சில மந்திரவாத பூஜைகளை நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 12 நாட்களுக்கு முன்பு பவன்குமாரின் மனைவி கிருஷ்ணவேணியின் சகோதரனான ஜெகன் என்பவர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார். இவரது மரணத்திற்கு பவன் குமாரின் மந்திரவாதம் தான் காரணம் என்று கிருஷ்ணவேணியின் உறவினர்கள் கருதினர். இது தொடர்பாக ஜெகனின் மனைவி மற்றும் அவரது உறவினர்கள் பவன் குமாருடன் தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தன்னுடைய சகோதரன் இறந்ததால் கிருஷ்ணவேணி அவரது வீட்டுக்குச் சென்றிருந்தார். கிருஷ்ணவேணியைப் பார்ப்பதற்காக பவன் குமார் நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டுக்குச் சென்றார். அப்போது அந்த வீட்டில் இருந்த ஜெகனின் மனைவி மற்றும் உறவினர்கள் பவன் குமாரை நாற்காலியில் கட்டிப் போட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் கருகி உயிரிழந்தார். இது குறித்து ஆல்வால் போலீசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று பவன்குமார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கிருஷ்ணவேணி, ஜெகனின் மனைவி சுமலதா மற்றும் உறவினர்கள் 6 பேரை போலீசார் கைது செய்தனர். ஆனால் தன்னுடைய கணவனின் கொலையில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கிருஷ்ணவேணி கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், என்னுடைய கணவருக்கும், என்னுடைய வீட்டினருக்கும் இடையே நீண்ட நாட்களாகத் தகராறு இருந்து வந்தது. எனது சகோதரர் இறந்ததால் நான் என்னுடைய வீட்டுக்குச் சென்றிருந்தேன். ஏற்கனவே எனது கணவர் மீது என்னுடைய உறவினர்கள் ஆத்திரத்தில் இருந்ததால் அவரிடம் என்னுடைய வீட்டிற்கு வர வேண்டாம் எனக் கூறியிருந்தேன்.ஆனால் அதைக் கேட்காமல் பவன் குமார் வீட்டுக்கு வந்தார். ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த என்னுடைய வீட்டினர் கணவரை நாற்காலியில் கட்டிப்போட்டு தீ வைத்து எரித்தனர். அவரது அலறல் சத்தத்தைக் கேட்டு நான் அங்கு ஓடிச் சென்றேன். ஆனால் அதற்குள் அவர் இறந்து விட்டார். என்னுடைய சகோதரனின் மனைவி சுமலதா தான் பவன் குமாரைத் தீவைத்து எரித்துக் கொன்றார். ஜெகன் இறந்ததற்கு என்னுடைய கணவர் தான் காரணம் என்று என்னுடைய வீட்டினர் நம்பினர். இதுதான் என் கணவரைக் கொலை செய்வதற்குக் காரணமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்