லவ் ஜிகாத்துக்கு எதிராகச் சட்டம் கொண்டுவரப்பட உள்ள நிலையில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் கணவன் மதம் மாற்ற முயற்சிப்பதாக காதல் மனைவி புகார் செய்துள்ளார். இதையடுத்து போலீசார் கணவனைக் கைது செய்தனர்.கர்நாடகா,மத்தியப் பிரதேசம், உத்திர பிரதேசம் உள்பட பாஜக ஆளும் மாநிலங்களில் லவ் ஜிகாத்துக்கு எதிராக அவசரச் சட்டம் கொண்டுவரத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் மத்தியப் பிரதேச மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா கூறுகையில், அடுத்த சட்டசபை கூட்டத் தொடரில் லவ் ஜிகாத்துக்கு எதிரான அவசரச் சட்டம் கொண்டுவரப்படும் எனக் கூறினார்.
இந்த வழக்கில் கைது செய்யப்படுபவர்களுக்கு 10 வருடம் வரை சிறைத் தண்டனை கிடைக்கும் என்று அவர் கூறியிருந்தார். கட்டாயத் திருமணம், பலாத்காரம் மற்றும் கட்டாய மதமாற்றம் ஆகியவையும் இந்த சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட உள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டால் ஜாமீன் கிடைக்காது. திருமணத்திற்கு முன்பு மதம் மாற விரும்புவார்கள் திருமணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பு மாவட்ட கலெக்டரிடம் முன் அனுமதி பெற வேண்டும். இந்நிலையில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் இந்த சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பே ஒரு இளம்பெண் தன்னுடைய கணவர் தன்னை மதம் மாற்ற முயற்சிப்பதாக போலீசில் புகார் கொடுத்துள்ளார்.இந்து மதத்தைச் சேர்ந்த இந்த இளம்பெண் கடந்த இரு வருடங்களுக்கு முன் இர்ஷாத் கான் என்ற வாலிபரைக் காதலித்து திருமணம் செய்தார். இவர்கள் இருவரும் மத்தியப் பிரதேச மாநிலம் தன்பூர என்ற பகுதியைச் சேர்ந்தவர்கள். 5 வருடங்களுக்கு மேலாகத் தீவிரமாக காதலித்து வந்த இருவரும் கடந்த 2018ல் திருமணம் செய்துகொண்டனர். முஸ்லிம் மதத்தின் படி இவர்களது திருமணம் நடந்தது.
இந்நிலையில் தன்னை தனது கணவர் இர்ஷாத் கான் கட்டாய மதமாற்றம் செய்ய முயற்சிப்பதாகவும், தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் கூறி தன்பூர் எஸ்பியிடம் அந்த இளம்பெண் புகார் கொடுத்தார். அதில் கூறியிருப்பது: நாங்கள் இருவரும் 5 வருடங்களுக்கு மேலாகக் காதலித்து வந்தோம். என் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி இர்ஷாத் கானை நான் திருமணம் செய்தேன். திருமணத்திற்குப் பின்னர் அரபி, உருது ஆகிய மொழிகளைப் படிக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் என்னை மதம் மாற கட்டாயப்படுத்தி வருகிறார். எனது பெற்றோரை மதிக்காமல் அவரை திருமணம் செய்ததில் நான் இப்போது வேதனைப்படுகிறேன்.
தற்போது நான் என்னுடைய வீட்டிற்குச் சென்று விட்டேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரைத் தொடர்ந்து இர்ஷாத் கானை போலீசார் கைது செய்தனர். 1968ம் ஆண்டு மத்தியப் பிரதேச மாநில மத சுதந்திர சட்டத்தின்படி இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தன்பூர் எஸ்பி பரத் துபே கூறினார். ஆனால் தன்னுடைய மனைவியை அவரது வீட்டினர் சிறைபிடித்து வைத்திருப்பதாக இர்ஷாத் கான் போலீசில் புகார் செய்துள்ளார். இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தன்பூர் எஸ்பி கூறினார்.