தமிழ்நாடு, ஆந்திரா உட்பட பல்வேறு மாநில பக்தர்களின் கோரிக்கைக்கு ஏற்ப சபரிமலையில் தினசரி பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி திங்கள் முதல் வெள்ளி வரை 2,000 பக்தர்களும் சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் தலா 3,000 பக்தர்களும் அனுமதிக்கப்படுவார்கள். நாளை முதல் ஆன்லைனில் முன்பதிவு தொடங்குகிறது.சபரிமலை ஐயப்பன் கோவில் வரலாறு காணாத அளவில் மண்டலக் கால பூஜையின் போது பக்தர்கள் இன்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது.
தற்போது கொரோனா காலம் என்பதால் சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி திங்கள் முதல் வெள்ளி வரை 1,000 பக்தர்களும், சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் 2,000 பக்தர்களும் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
தரிசனத்திற்குச் செல்லும் போது 24 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழையும் பக்தர்கள் கொண்டு செல்ல வேண்டும். மண்டலக் காலத்தில் வழக்கமாகச் சபரிமலையில் லட்சக்கணக்கில் பக்தர்கள் திரள்வார்கள். குறிப்பாகத் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உட்பட மாநிலங்களில் இருந்து தான் பெருமளவு சபரிமலைக்குப் பக்தர்கள் செல்கின்றனர்.இவ்வருடம் பக்தர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால் சபரிமலை செல்லமுடியாமல் பெரும்பாலான பக்தர்கள் மனவேதனை அடைந்தனர். இதையடுத்து பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று கேரள அரசுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
பக்தர்கள் வருகை குறைந்ததால் சபரிமலை கோவில் வருமானமும் கடுமையான குறைந்தது. இதனால் கோவில் ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்கக் கூட பணம் இல்லாத நிலை ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று சபரிமலை கோவில் நிர்வாகமும் கேரள அரசுக்குக் கோரிக்கை விடுத்தது. இந்நிலையில் நாளை முதல் பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கக் கேரள அரசு தீர்மானித்துள்ளது. இதன்படி திங்கள் முதல் வெள்ளி வரை 2,000 பக்தர்களுக்கும், சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் 3,000 பக்தர்களுக்கும் அனுமதி அளிக்கப்படும். நாளை முதல் ஆன்லைனில் முன்பதிவு தொடங்குகிறது.