டிசம்பர் 8ம் தேதி பந்த்: விவசாயிகள் அழைப்பு

by SAM ASIR, Dec 4, 2020, 21:19 PM IST

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் டிசம்பர் 8ம் தேதி (செவ்வாய்) நாடு தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார்கள். அரசுடனான போராட்டத்தின் ஓர் அங்கமாக டெல்லியிலுள்ள அனைத்து சாலைகளையும் அன்று மறிக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர். முழு அடைப்பு தினத்தன்று நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளிலுள்ள சுங்க சாவடிகளை ஆக்கிரமித்து, சுங்கம் வசூலிக்க இயலாமல் செய்வோம் என்றும் அறைகூவல் விடுத்துள்ளனர். தங்கள் போராட்டத்தில் இன்னும் அநேகர் வந்து இணைவார்கள் என்று போராட்டக் குழு ஒன்றின் தலைவர் ஹரிந்தர் சிங் லாக்ஹோவல் தெரிவித்துள்ளார்.

"குறைந்தபட்ச ஆதார விலை, மின்சாரம் மற்றும் வைக்கோலை எரிப்பதற்கு அபராதம் இவற்றை குறித்த கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொள்ளும் நிலை உள்ளது. ஆனால், புதிய சட்டங்கள் திரும்பப் பெறப்படும் வரைக்கும் நாங்கள் போராட்டத்தை நிறுத்தப்போவதில்லை," என்று பஞ்சாபை சேர்ந்த ஜாம்ஹூரி கிசான் சபாவின் தலைவர் சட்னம் சிங் அஞ்னாலா கூறியுள்ளார். செப்டம்பரில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் மூலம் ஆதாரவிலையில் தானியங்களை வாங்குவதை அரசு நிறுத்திவிடும். தாங்கள் தனியார் வியாபாரிகளின் தயவை நாடும் நிலைக்குத் தள்ளப்படுவோம் என்று விவசாயிகள் அஞ்சுகின்றனர்.

"விவசாயிகளால் எழுப்பப்பட்ட பிரச்னைகளுக்கு பதில் கூறியுள்ளோம். மீண்டும் டிசம்பர் 5ம் தேதி சந்திக்க இருக்கிறோம்" என்று மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சர் நரேந்திர சிங் தோமர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். விவசாயிகள் விரும்பினால் மட்டுமே தனியார் வியாபாரிகளிடம் விற்கலாம் என்றுதான் புதிய சட்டங்கள் கூறுகின்றன என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது. புதிய சட்டங்களில் திருத்தங்களை கொண்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் விவசாயிகள் சங்கத்தினர் அந்தச் சட்டங்களை திரும்ப பெறவேண்டுமென்று வலியுறுத்தி வருகின்றனர் என்று விவசாயிகள் சங்கம் ஒன்றின் தலைவரான கவிதா குருகாந்தி தெரிவித்துள்ளார்.

You'r reading டிசம்பர் 8ம் தேதி பந்த்: விவசாயிகள் அழைப்பு Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை