மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாக மத்திய அரசுக்கு அம்மாநில கவர்னர் அறிக்கை அனுப்பியுள்ளார். மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு மே மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் கட்சி மக்களிடம் அதிருப்தியை சந்தித்து வருகிறது. அம்மாநிலத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பலமிழந்து விட்டன. பாஜக, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 18 இடங்களை வென்று முக்கிய எதிர்க்கட்சியாக உள்ளது. வரும் தேர்தலில் நிச்சயமாக ஆட்சியைப் பிடிப்போம் என்று பாஜக தலைவர்கள் சொல்லி வருகின்றனர்.
மத்திய அமைச்சர் அமித்ஷா அடிக்கடி மேற்கு வங்கத்திற்கு விசிட் செய்து அரசியல் வியூகங்களை வகுத்து வருகிறார். அதில் ஒன்றாக திரிணாமுல் கட்சிக்குள் உள்ள அதிருப்தியாளர்களை பாஜக வளைத்து வருகிறது. டெல்லியில் இருந்து பாஜக மூத்த தலைவர்கள் அடிக்கடி வந்து திரிணாமுல் கட்சியினர் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். இதற்கிடையே இரு கட்சியினருக்கும் இடையே பல இடங்களில் மோதல் ஏற்பட்டு, வன்முறைச் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. அரசியல் கொலைகளும் நடக்கின்றன. பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று மேற்குவங்கத்திற்கு வந்திருந்தார்.
அவர் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு திரும்பிய போது அவரது காரைத் தொடர்ந்து பல கார்களில் பாஜகவினர் சென்றனர். அப்போது ஓரிடத்தில் இருந்து அந்த கார்கள் மீது சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. ஜே.பி.நட்டா சென்ற கார், புல்லட் புரூப் கார் என்பதால் சேதம் ஏற்படவில்லை. மாநில பொதுச் செயலாளர் விஜய் வர்ஜியா வந்த கார் மீது கல் விழுந்ததில் கண்ணாடிகள் உடைந்தன. அவரது பாதுகாப்பு வீரர் காயமடைந்தார். திரிணாமுல் கட்சியினர்தான் இந்த வன்முறைகளில் ஈடுபட்டதாக பாஜக தலைவர்கள் குற்றம்சாட்டினர். ஆனால், இது பாஜகவினர் திட்டமிட்டு நடத்தும் நாடகம் என்று மம்தா பானர்ஜி பதிலுக்கு குற்றம்சாட்டியுள்ளார்.
இந்நிலையில், மேற்கு வங்கத்தில் வன்முறைகள் அதிகமாகி விட்டதாகவும், சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார். இதைத் தொடர்ந்து, மேற்கு வங்க கவர்னர் ஜெகதீப் டங்கர், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார். இது பற்றி கவர்னர் டங்கர் கூறுகையில், ஜனநாயக மாண்புகளை குலைக்கும் வகையிலான நிகழ்வுகள் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளேன் என்று தெரிவித்தார். கவர்னர் இதே போல் மத்திய அரசுக்கு அறிக்கைகள் அனுப்பும் பட்சத்தில், அம்மாநிலத்தில் தேர்தலுக்கு முன்பாக ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படும் என்று பேசப்படுகிறது.