சபரிமலையில் பக்தர்கள், போலீசார் மற்றும் ஊழியர்களிடையே கொரோனா பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து வரும் 26ம் தேதிக்குப் பின்னர் சபரிமலை செல்லும் பக்தர்கள் உள்பட அனைவருக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை கண்டிப்பாக நடத்த வேண்டும் என்று கேரள சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார்.கடந்த சில மாதங்களாகக் கேரளாவில் கொரோனா நோய் பரவல் அதிகரித்து வருகிறது. தினமும் சராசரியாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நோய் பரவுவது கேரள சுகாதாரத் துறைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் கேரளாவில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் பிரசித்தி பெற்ற சபரிமலை மற்றும் குருவாயூர் கோவிலில் நோய் பரவல் அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது. குருவாயூர் கோவிலில் பூசாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு நோய் பரவியதைத் தொடர்ந்து கடந்த 12ம் தேதி முதல் குருவாயூர் கோவில் அமைந்துள்ள பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சபரிமலையிலும் நோய் பரவல் அதிகரித்துள்ளது. மண்டல பூஜைக்கு நடை திறந்த கடந்த 1 மாதத்தில் போலீசார், பக்தர்கள் உள்பட 290க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரவியுள்ளது. இதையடுத்து ஜனவரி 20ம் தேதி மகர விளக்கு காலம் முடியும் வரை கூடுதல் பக்தர்களை அனுமதிக்க வேண்டாம் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் சபரிமலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து பக்தர்கள், பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் மற்றும் ஊழியர்களுக்குக் கட்டுப்பாடுகளை அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று கேரள சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பது: சபரிமலையில் பணியில் உள்ள போலீசார் ஊழியர்கள் மற்றும் பக்தர்களுக்கு கொரோனா பரவுவது அதிகரித்து வருகிறது. எனவே வரும் 26ம் தேதிக்குப் பின்னர் சபரிமலை வரும் பக்தர்கள் உட்பட அனைவரும் ஆர்டிபிசிஆர், ஆர்டி லேப் மற்றும் எக்ஸ்பிரஸ் நாட் ஆகிய பரிசோதனைகளில் ஏதாவது ஒன்றைக் கண்டிப்பாக நடத்த வேண்டும். சபரிமலை வருவதற்கு 24 மணி நேரத்திற்குள் இந்த பரிசோதனை நடத்த வேண்டும். இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகரித்துள்ள பரிசோதனை கூடங்களில் மட்டுமே இதை நடத்த வேண்டும்.
சபரிமலை வரும் பக்தர்கள் அனைவரும் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை செல்லும் பக்தர்கள் இதுவரை 24 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆன்டிஜன் பரிசோதனை நடத்தினால் மட்டுமே போதுமானதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.