கேரளாவில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகள் மார்ச் 17ம் தேதி தொடங்குகிறது. கல்லூரி இறுதி ஆண்டு மற்றும் முதுகலை வகுப்புகளை ஜனவரி 1 முதல் தொடங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.கொரோனா பரவலைத் தொடர்ந்து கேரளாவிலும் கடந்த மார்ச் முதல் பள்ளி, கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. கல்வி நிலையங்கள் மூடப்பட்ட போதிலும் ஜூன் 1ம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளைத் திறப்பது மற்றும் பொதுத்தேர்வு நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இன்று திருவனந்தபுரத்தில் நடந்தது. இதில் பள்ளிக்கல்வி, உயர்கல்வித் துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பள்ளி, கல்லூரிகளை எப்போது திறப்பது, பொதுத் தேர்வுகளை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை மார்ச் 17ம் தேதி தொடங்கி 30ம் தேதி முடிக்கத் தீர்மானிக்கப்பட்டது. செய்முறைத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் ஜனவரி 1 முதல் தொடங்கும். ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்களுக்குச் சந்தேகம் இருந்தால் அதை நிவர்த்தி செய்வதற்காக வசதி ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஜனவரி மாதம் முதல் தேவைப்பட்டால் பெற்றோர் சம்மதத்துடன் 10, 12ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்குச் செல்லலாம். இதேபோல மாதிரி தேர்வுகள் மற்றும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் ஆகியவையும் நடத்தப்படும்.
கல்லூரி இறுதியாண்டு மற்றும் முதுகலை வகுப்புகள் ஜனவரி 1ம் தேதி முதல் தொடங்க தீர்மானிக்கப்பட்டது. 50 சதவீதம் மாணவர்கள் மட்டுமே வகுப்புகளில் அனுமதிக்கப்படுவார்கள். தேவைப்பட்டால் காலையிலும், பிற்பகலிலும் 2 ஷிப்டுகளில் வகுப்புகள் நடத்தப்படும். விவசாய மற்றும் மீன்வளத் துறை பல்கலைக்கழகத்திலும் வகுப்புகள் தொடங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் வருடம் படிக்கும் மருத்துவ மாணவர்களுக்கும் ஜனவரி முதல் வகுப்புகள் தொடங்கும்.