வேளாண் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதற்காக 23ம் தேதி கேரள சட்டசபையின் சிறப்பு கூட்டம் நடைபெற இருக்கிறது. இதற்காக கவர்னரிடம் அனுமதி கோர இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய 3 வேளாண் சட்டத் திருத்த மசோதாக்களுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கடந்த சில வாரங்களாக பஞ்சாப் உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் முகாமிட்டு கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தால் மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை எந்த பலனும் ஏற்படவில்லை.
சட்டத்தை வாபஸ் பெற மாட்டோம் என்று மத்திய அரசும், வாபஸ் பெறாமல் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று விவசாயிகள் சங்கத்தினரும் கூறி வருகின்றனர். ஆனாலும் நாளுக்கு நாள் போராட்டம் பல்வேறு மாநிலங்களிலும் தீவிரமடைந்து வருவதால் இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதையடுத்து விவசாயிகள் சங்கத்தினரை மத்திய அரசு மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. இதற்கிடையே இந்த சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி உள்பட சில மாநிலங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சட்டத் திருத்த திருத்த மசோதாவின் நகலை எரித்து பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கேரளாவும் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்துள்ளது. இதற்காக 23ம் தேதி (நாளை மறுநாள்) சிறப்பு சட்டசபைக் கூட்டம் நடைபெற உள்ளது. ஒரு மணி நேரமே நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் முதல்வர், எதிர்க்கட்சித் உள்பட முக்கிய தலைவர்கள் மட்டுமே பேசுவார்கள். தொடர்ந்து சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படும். இந்த சிறப்பு கூட்டத்தை நடத்துவதற்காக கவர்னரிடம் அனுமதி கோர முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இன்று நடந்த சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.