கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கில் பாதிரியார் தாமஸ் மற்றும் கன்னியாஸ்திரி செபி ஆகியோர் குற்றவாளிகள் என்று திருவனந்தபுரம் சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவர்களுக்கான தண்டனை விவரங்கள் நாளை அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த தாமஸ் மற்றும் லீலா தம்பதியின் மகளான அபயா, அங்குள்ள பயஸ் டென்த் என்ற கான்வென்டில் கன்னியாஸ்திரியாக இருந்தார். இவர் கோட்டயத்தில் ஒரு கல்லூரியில் உளவியல் படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 1992 மார்ச் 27ம் தேதி கன்னியாஸ்திரி அபயா கான்வென்டில் உள்ள கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து விசாரணை நடத்திய உள்ளூர் போலீசாரும், குற்றப்பிரிவு போலீசாரும் கன்னியாஸ்திரி அபயா தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி வழக்கை மூடினர். தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் இது கொலை என்றும், சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் கூறி அபயாவின் பெற்றோர் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்தனர். உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ விசாரணையைத் தொடங்கியது.
இந்த விசாரணையில் தான் அபயா தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும், அவர் கொலை செய்யப்பட்டார் என்றும் தெரியவந்தது. இது தொடர்பாகப் பாதிரியார்களான தாமஸ், ஜோஸ் மற்றும் கன்னியாஸ்திரி செபி ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். கன்னியாஸ்திரி செபிக்கும், 2 பாதிரியார்களுக்கும் இடையே தகாத உறவு இருந்ததும், அதைப் பார்த்ததால் தான் 3 பேரும் சேர்ந்து அபயாவை அடித்து கிணற்றில் போட்டதும் தெரியவந்தது. பின்னர் இந்த வழக்கில் இருந்து பாதிரியார் ஜோஸ் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு திருவனந்தபுரம் சிபிஐ நீதிமன்றத்தில் கடந்த வருடம் தொடங்கியது. இந்த வழக்கில் தொடக்கத்திலிருந்தே கிறிஸ்தவ சபைகளின் சார்பிலும், மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில் பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. ஆனால் சிபிஐ அதிகாரிகள் திறமையாக விசாரித்து வழக்கை நடத்தினர். சிபிஐயின் சென்னை பிரிவும் இந்த வழக்கு விசாரணையை நடத்தியது.
தற்போது தமிழக உளவுத்துறை ஐஜியாக இருக்கும் ஈஸ்வர மூர்த்தியும் இந்த வழக்கில் விசாரணை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சிபிஐ நீதிமன்றம், பாதிரியார் தாமஸ் மற்றும் கன்னியாஸ்திரி செபி ஆகியோர் குற்றவாளிகள் என அறிவித்துள்ளது. இவர்களது தண்டனை விவரங்கள் நாளை அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கில் 28 வருடங்களுக்குப் பின்னர் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் இந்த வழக்கின் தீர்ப்பு வரும் போது அதைக் கேட்பதற்கு கன்னியாஸ்திரி அபயாவின் பெற்றோர் இருவரும் தற்போது உயிருடன் இல்லை என்பது வேதனையான ஒன்றாகும்.